Press "Enter" to skip to content

செப்டெம்பர் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் – ஐக்கிய மக்கள் சக்தி

அவசர கால நிலை பிரகடனம் , அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் போன்ற அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளால் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இம்மாதம் ஐ.நா. குழுவினர் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பரில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இதன் போது எமக்கு எவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என்று கூற முடியாது.

இலங்கைக்கு மேலும் இரு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவது குறித்து ஐ.நா. அவதானம் செலுத்தியிருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தி , அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது. தொழிற்சங்க தலைவர்களை கைது செய்தது. இவ்வாறான செயற்பாடுகளால் ஐ.நா.வின் தீர்மானத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் தேர்தல் ஆணைக்குழு வசமாகும். அதன் பின்னர் அதன் காலத்தை நீடிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணைக்குழு எவ்வாறு செயற்படுகிறது என்பதையே அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். காரணம் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை இல்லை என்பதைப் போன்றே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்திற்கு சாதகமாக அமைந்தால் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு ஆர்வம் காண்பிக்கும். மாறாக அரசாங்கத்திற்கு பாதகமாக அமைந்தால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காண்பிக்காது. இதுவே உண்மை நிலைவரமாகும். கொவிட் காலத்தில் பாராளுமன்ற தேர்தலை இரண்டு ஆண்டுகள் ஒத்தி வைக்குமாறு கோரிய போதிலும் , அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் அதன் பின்னர் உள்ளுராட்சி தேர்தலின் போது , கொவிட் தொற்று எனக் கூறி அதனைக் காலம் தாழ்த்தினர். தேர்தல் ஆணைக்குழுவை பகிரங்கமாக செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம். இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்பிய போது , கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

கடிதங்கள் எமக்கு தேவையற்றவை. தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுகின்றமையை உண்மையில் ஆணைக்குழு எதிர்க்குமாயின் அதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். எனினும் இதுவரையில் தேர்தல் ஆணைக்குழு இந்த விவகாரத்தில் பகிரங்கமாக அதன் எதிர்ப்பினை வெளியிட்டதில்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *