முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம் தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும்,மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் ,இந்திய இழுவைப் படகுகளின் வருகையினை தடை செய்ய வேண்டும், சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு நகரில் இன்று (16) மீனவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
முல்லைத்தீவு மீனவ சம்மேளனத்தினால் காலை 10.00 மணிக்கு புனித இராயப்பர் ஆலயத்துக்கு அருகில் ஆரம்பமான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது முல்லைத்தீவு நகரின் ஊடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது . வேண்டும் வேண்டும் மண்ணெண்ணெய் வேண்டும்,தடை செய் தடை செய் சட்டவிரோத தொழிலை தடை செய்,நிறுத்து நிறுத்து இந்திய இழுவைப்படகின் அத்துமீறலை நிறுத்து உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஆயிரம் மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
பேரணியாக சென்ற மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (நிர்வாகம் ) மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் (காணி) மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர் .
ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பதற்காக கையளிக்கப்பட்ட குறித்த மகஜர்களை தங்களது குறிப்புக்களையும் உள்ளடக்கி உரிய தரப்பினர்களுக்கு அனுப்பி வைப்பதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மீனவர்களிடம் உறுதியளித்தார்.
Be First to Comment