பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மீண்டும் தொடங்கினால், தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு எதிராக மீண்டும் தடை விதிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண் 01 இன் கீழ் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததற்காக 2021ம் ஆண்டில் 577 தனிநபர்கள் மற்றும் 18 நிறுவனங்கள் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், முக்கிய புலனாய்வு முகவர்கள்,இலங்கை மத்திய வங்கியின் சட்ட அமலாக்க முகவர் மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவுடன் பாதுகாப்ப அமைச்சின் விசேட குழுவினால் பாதுகாப்பு அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் கவனமான ஆய்வுகளின் பின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், பட்டியலிடுவதற்கும் நீக்குவதற்கும் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
சிறப்பு வர்த்தமானி வெளியீடு
இதன்படி, மேற்கூறிய 577 தனிநபர்கள் மற்றும் 18 அமைப்புகளில், 316 தனிநபர்கள் மற்றும் 06 நிறுவனங்கள் இனி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யாததால், அவர்களை பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட 55 தனிநபர்கள் மற்றும் 03 அமைப்புகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரை 2022 ஜூன் 29 அன்று வெளிவிவகார அமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பின்னர், ஆகஸ்ட் 01, 2022 திகதியிட்ட சிறப்பு வர்த்தமானி எண் 2291/02 மூலம் 316 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.
நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு
பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செய்வதில் ஈடுபட்டதால் தடைபட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகளின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, தடைபட்டியலில் இருந்து அந்த நபர்கள் அல்லது அமைப்புகளை நீக்குவது அல்லது தடைபட்டியலில் புதிய நபர்கள் அல்லது அமைப்புகளைச் சேர்ப்பது பாதுகாப்பு நிறுவனங்களால் அவ்வப்போது செய்யப்படும் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
பட்டியலிடப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானமாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Be First to Comment