சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் மண்டியிடும் வெளிநாட்டு கொள்கைகள் எமக்கு தேவையில்லை. மாறாக எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத சுயாதீன வெளிநாட்டு கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தம்மை புதிய லிபரல்வாதிகள் எனக் கூறிக் கொள்பவர்களின் தவறான கொள்கைகளினாலேயே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது.
சர்வதேசத்தின் விலையைப் பேணுவதற்காக எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தினோம். இதனை தற்போது தான் அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது.
அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். சமூக பொருளாதார வர்த்தக்கத்தின் மூலம் நடுத்தர வர்க்க மக்களும் , வருமானம் குறைந்த மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
தற்போது வருமானம் குறைந்தோருக்காக வழங்கப்படும் சமூர்த்தி கொடுப்பனவுகள் 50 சதவீதம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. வருமானம் அற்றோருக்கு அன்றி , சிறந்த வருமானத்தைப் பெறுபவர்களுக்கே சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
சில அரச நிறுவனங்களை தனியார் துறையுடன் இணைந்து நிர்வகித்தால் , பாரிய நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டத்தை முற்றாகக் குறைக்க முடியும். அதற்கு இலஞ்ச , ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட வேண்டும்.
அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது , அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் மறைக்கப்படக் கூடாது.
சில நாடுகளுடன் கொடுக்கல் – வாங்கல்களை மேற்கொள்வதை விட , ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி , சர்வதேச நாணய நிதியம் , ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றுடன் இணைந்து செயற்படுவது மிக இலகுவானதாகும்.
சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் மண்டியிடும் வெளிநாட்டு கொள்கைகள் எமக்கு தேவையில்லை. மாறாக எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத சுயாதீன வெளிநாட்டு கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும் என்றார்.
Be First to Comment