தெற்காசிய தீவான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும், அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் தப்பிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும், அல்பானீஸ் அரசாங்கம் இலங்கைக்கான அவசர உதவியை 75 மில்லியன் டொலர்களாக உயர்த்தியுள்ளது.
இதனை அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் மிக மோசமான நிதிச்சரிவு கடந்த மூன்று மாதங்களில் விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் இதர தேவைகளின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
வாழ்வாதார நெருக்கடி
அத்துடன் பணவீக்கம் 60 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. வாழ்க்கை நிலைமை மோசமடைந்ததன் விளைவாக, இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகுகளில் செல்லும் முயற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.இதுவரை ஐந்து படகுகளை அவுஸ்திரேலிய எல்லைப் படை தடுத்து நிறுத்தியுள்ளது.
இலங்கையின் வீழ்ச்சிக்கு மத்தியில், அவசர மனிதாபிமான ஆதரவிற்காக அவுஸ்திரேலியா ஜூன் மாதம் 50 மில்லியன் டொலர்களை வழங்கியது.
இதனையடுத்து நாளை வெள்ளியன்று, உணவு மற்றும் சுகாதார பொருட்களை விரைவாக வழங்க மேலும் $25 மில்லியனை அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.இந்தநிலையில் அவுஸ்திரேலியா, இலங்கை மக்களுடன் குறிப்பாக கடுமையான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களுடன் நிற்கின்றது என வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
Be First to Comment