போராட்டகாரர்களின் செயற்பாடுகளினால் கோல்பேஸ் மைதானத்திற்கு 2000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கோல்பேஸ் மைதானத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களிடமிருந்து நட்டஈடு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த போது அவரை பதவி விலகுமாறு கோரி செயற்பாட்டாளர்கள் குழுவொன்று காலிமுகத்திடல் பகுதியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கி போராட்டத்தை முன்னெடுத்தது . கோட்டாபய பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, போராட்டக்காரர்களை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி அவர்கள் அங்கிருந்து வெளியேறினார் .
போராட்டக்காரர்கள் தங்கியிருந்த பிரதேசம் கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்டதுடன் விசேட வர்த்தமானி மூலம் நகர அபிவிருத்திப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அபிவிருத்திப் பகுதியில் ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கை அல்லது தற்காலிக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டால், 1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபை திருத்தச் சட்டத்தின் 8(A) 1 ஆவது பிரிவின்படி அனுமதி பெறப்பட வேண்டும். குறித்த பிரதேசத்தில் அனுமதியற்ற பல கட்டுமானங்களை ஆர்வலர்கள் மேற்கொண்டுள்ளமையினால் பொதுமக்கள் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கான உரிமையும் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சு, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.





Be First to Comment