வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை TID யிடம் ஒப்படைக்க பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்
Digital News Team 2022-08-22T10:52:43
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் அவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் (TID) ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் நேற்று இந்த அறிவுறுத்தல் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வசந்த முதலிகே உட்பட இருவர் மீதான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வசந்த முதலிகே, வண. கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க ஆகியோர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியைத் தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை 90 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியது.
வசந்த முதலிகேவுக்கு எதிரான பிடியாணை நிலுவையில் உள்ளதால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, மூன்று செயற்பாட்டாளர்கள் மீதான தடுப்பு உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களுக்கான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment