நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக, உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இதற்கான சட்டஏற்பாடுகளை நாடாளுமன்றில் நிறைவேற்றுமாறு அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தினால் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் நீக்கப்பட்டது.
ஜெனீவா மனித உரிமை பேரவையின் மாநாடு அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த சுரேன் சுரேந்திரன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உதவிகயை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
2016ம் ஆண்டு தென்னிலங்கையில் வெள்ளம் ஏற்பட்டிருந்த போது, உலகத் தமிழர் பேரவை சிங்கள மக்களுக்கு பெரும் உதவிகளை வழங்கியது.
ஆனால் கடந்த ஆண்டு இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுவாச கருவிகளை வழங்கிய போது, நாங்கள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் அதனை பெற்றுக் கொள்ள இலங்கை அதிகாரிகள் மறுத்தார்கள். இதனால் பல மரணங்கள் சம்பவித்தன.
அதற்கு அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும். இலங்கையில் புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை காரணமாக வருடாந்தம் 300 மில்லியன் டொலர்கள் அளவில் அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலர் ஜேர்மனி போன்ற நாடுகளில் பில்லியனியர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் இலங்கையில் பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய முடியும்.
அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று சுரேன் தெரிவித்தார்.
Be First to Comment