காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்தை தயவு செய்து அரசியல் ஆக்காதீர்கள். புனிதமான போராட்டத்தை எல்லோரையும் இணைத்து செயற்படுகின்ற ஒரு வாய்ப்பை உண்டு பண்ணுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவுகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
‘காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அனைத்து அம்மாமார், ஐயாமார் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். இது ஒரு புனிதமான போராட்டம். ஐநா சபையிலே இன்றும் எங்களுடைய கருத்துக்கள் உயிரோடு இருக்கின்றது என்றால் உங்களுடைய போராட்டத்தின் பின்னணி தான் காரணம்.
தொடர்ச்சியாக இரண்டாயிரம் நாட்களை கடந்திருக்கின்றது. அதிலே உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்ற நூற்றிபத்து அம்மாமார் இறந்திருக்கின்றார்கள்.
என்னுடைய கோரிக்கை என்னவென்றால், தயவு செய்து அரசியல் ஆக்காதீர்கள். புனிதமான போராட்டத்தை எல்லோரையும் இணைத்து செயற்படுகின்ற ஒரு வாய்ப்பை உண்டு பண்ணுங்கள். நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு பின்னாலே கட்டாயம் வருவோம். உங்களின் பின்னாலே நாங்கள் நிற்போம். ஐநா வரைக்கும் அல்லது அதற்கு மேலே செல்ல வேண்டும் என்றாலும் நாங்கள் செல்ல தயாராக இருக்கிறோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐநா கூறிய தீர்மானத்தின் அடிப்படையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சிதான் காணாமல் போன உறவுகளுக்கான காரியாலயம் அது நம்பிக்கையற்று போய்விட்டது. நாங்களும் குறை கூறுகின்றோம்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் உள்ளடக்கப்பட்ட நிலையிலே தான் நம்பிக்கையோடு எங்களுடைய தாய்மார்கள் வந்து துணிச்சலாக பதில் கூற முடியும் இன்றைக்கும் தேடிக்கொண்டிருக்கின்ற, இந்த புனித போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற எங்களுடைய அத்தனை உள்ளங்களையும், நான் மன்றாட்டமாக கேட்கின்றேன். தயவு செய்து இதனை அரசியல் ஆக்காதீர்கள். எங்களுடைய போராட்டத்தை எல்லோரும் ஒருமித்து செய்யக்கூடிய பலத்தை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணுங்கள். உங்களுக்கு பின்னாலே நாங்கள் நிச்சயமாக தொடர்ந்து பயணிப்போம் என்பதனை கூறிக்கொள்கிறேன்.’ என தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்தை அரசியல் ஆக்காதீர்கள் – செல்வம் எம்.பி
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment