மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையொன்றில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றமை தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் பின்னரே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர், பாடசாலை மாணவர்களை தனது விடுதிக்கு வரவழைத்து, அவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக சாட்சிகளுடன் உண்மைகள் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (23) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கடும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பாடசாலைகள் சார்ந்து இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் தகவல்கள் உடனடியாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 இலங்கை சிறுவர் உதவி தொலைப்பேசி சேவைக்கு அறிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவிக்கின்றது
Be First to Comment