பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகளை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 26,45 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட கேஸ் சிலிண்டர்கள், உடற்கட்டமைப்பு இயந்திரம் மற்றும் சில காலி வெளிநாட்டு மதுபான போத்தல்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கலவரத்தின் போது இரத்மலானை சிறிமல் உயன பிரதேசத்தில் வீடுகளை தாக்கி சொத்துக்களை கொள்ளையடித்த சந்தேகநபர்கள் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் மற்றும் தனிப்பட்ட தகவலறிந்தவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களை தாக்க வந்த மற்றைய குழுவினருடன் அருகில் உள்ள புகையிரத பாதையில் வைத்து அருந்தியது தெரியவந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் அபேசேகரவின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பெரேரா, பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்.எஸ்.முனசிங்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தாக்கியதாக கூறப்படும் 25 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment