பாதுகாப்பு அமைச்சின் தடைப்பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கபட்டுள்ளது.
தங்களது வேண்டுகோளில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இத்தகவலை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
11 முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 அமைப்புகள் எவ்வித பயங்கரவாத சம்பவங்களுடனோ பயங்கரவாத அமைப்புகளுடனோ தொடர்பைக் கொண்டிருக்கவில்லை.
எனவே, இவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென நானும் அநுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியவர்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே முதலாவது கூட்டம் இடம்பெற்றது. அடுத்த சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளது. இதன்போது இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு முடிவுறுத்தப்படும்.
மேலும் தடை செய்யப்பட்டகுறித்த 6 அமைப்புகளின் முக்கியஸ்தர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடிய பின்னர் அவற்றின் மீதான தடைகள் நீக்கப்படும் என்றார்.
Be First to Comment