மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின்படி, காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.
நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான அறிக்கையை பிற்பகல் 2 மணிக்குள் ஜனாதிபதி சமர்ப்பிப்பார்.
அதன் பின்னர் நாளை மறுதினம் வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியினால் நாளை நாடாளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால பாதீட்டு சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இந்த சந்திப்பினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இடைக்கால பாதீட்டு சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றிரவு எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மின் கட்டணம், நீர் கட்டணம் என்பனவற்றின் அதிகரிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கு இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பினை வெளியிடவுள்ளதாகவும் அவர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.
Be First to Comment