சிறுவர் மந்தபோசனையை குறைப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகில் சிறுவர் மந்தபோசனை அதிகரிப்பில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக இலங்கைக்கு வருகை தந்த யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஆசிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
உண்மையில் இது சிறந்த விடயமல்ல.
மந்தபோசனை காரணமாக நாட்டின் எதிர்கால சந்ததியானது எதிர்கொண்டுள்ள அவதான நிலைமை தொடர்பில் நாம் கரிசணை கொள்ள வேண்டியது அவசியம்.
நாட்டில் நூற்றுக்கு 75 சதவீதமான குடும்பங்களுக்கு போசனைமிக்க உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் சிறுவர் மந்தபோசணை அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகின்றது.
எனவே இலங்கையில் சிறுவர் மந்தபோசணையை இல்லாமல் செய்வதற்காக உலக நாடுகள் உதவுவதற்கு முன்வர வேண்டும் என்று யுனிசெப் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
போசனைமிக்க உணவு, சிறுவர்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு உதவ முன்வருமாறு உலக நாடுகளிடம் யுனிசெப் நிறுவனம் உதவி கோரியுள்ளது.
சிறுவர் மந்தபோசனை மட்டம் அதிகரித்துள்ளதனூடாக எதிர்காலத்தில் புத்திகூர்மையற்ற சந்ததியே உருவாகபோகின்றது.
உண்மையில் இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும்.
ஏனெனில் சுகாதாரத்துறையிலும் கல்வியிலும் இலங்கையானது முன்னிலையில் இருந்தது.
எனினும் கடந்த சில வருடங்களுக்குள் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை, திட்டமில்லாத செயற்பாடுகள், போதிய உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை என்பவற்றால் மந்தபோசனை மட்டமானது மேலும் அதிகரித்து செல்கின்றது.





Be First to Comment