கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அத்துடன் , நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி கைதானவர்கள் விடுவிக்கப்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அடங்கிய புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களில் எதிரணியினராகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்.
சர்வதேசங்கள் – புலம்பெயர் தமிழர்கள் உதவி
இந்த விடயங்கள் நிறைவேற்றப்பட்டால் பொருளாதார நெருக்கடியும் நீங்கும். ஏனெனில் இந்த விடயங்களில் வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உறுதியாக உள்ளன.
அவை நிறைவேறியவுடன் சர்வதேச சமூகம் தாமாகவே முன்வந்து எமது நாட்டுக்கு உதவி வழங்கும் என கூறிய ராஜித, புலம்பெயர் தமிழ் மக்களும் எந்தவித அச்சமும் இன்றி நாட்டுக்கு வந்து முதலீடுகளை வழங்கி உதவி செய்வார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மொட்டு’க் கட்சியினரின் செல்லப்பிள்ளை
எனினும் , மேற்படி விடயங்களை நிறைவேற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பகத்தன்மையுடன் செயற்படுவார் என்பது கேள்விக்குறி எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ராஜபக்சக்களின் ‘மொட்டு’க் கட்சியினரின் செல்லப்பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க, அவர்களின் சொற்படியே நடக்கின்றதாக குற்றம் சுமத்திய ராஜித, அதனால்தான் ஜனாதிபதியை நாம் எதிர்க்கின்றோம் என்றும் கூறினார்
Be First to Comment