Press "Enter" to skip to content

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் விண்ணபிக்க கால அவகாசம்

க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரையான 3 வாரங்களுக்கு ஒன்லைன் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கமுடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு உரியவாறான தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில் செவ்வாய்கிழமை (30) கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவினால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு வருமாறு:

கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) வெளியாகியிருக்கும் நிலையில், மாணவர்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் இணையவழியில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கமுடியும். அதன்படி மாணவர்கள் www.ugc.ac.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையான 3 வாரங்களுக்குப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வழமையாக மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக விண்ணப்பப்படிவம் மற்றும் அதுகுறித்த தெளிவுபடுத்தல்கள் அடங்கிய வழிகாட்டல் நூல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட புத்தகசாலைகள் ஊடாக விநியோகிக்கப்படும்.

அதன்படி இம்முறையும் அவ்வழிகாட்டல் நூல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட புத்தகசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருப்பதுடன் அவை எதிர்வரும் சனிக்கிழமை முதல் விற்பனைக்குத் தயார் நிலையிலிருக்கும்.

அதேபோன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலப்பத்திரிகைகள் அனைத்திலும் அவ்வழிகாட்டல் நூலைக் கொள்வனவு செய்யக்கூடிய புத்தகசாலைகள், அவற்றின் முகவரிகள் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும்.

அதுமாத்திரமன்றி இவ்வழிகாட்டல் நூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் தரவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.

ஏற்கனவே கூறப்பட்டவாறு இம்முறை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் தேசிய அடையாள அட்டையைத் தம்வசம் வைத்திருப்பது இன்றியமையாததாகும்.

அதேவேளை இணையவழியில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அதுகுறித்து மும்மொழிகளிலும் இலகுநடையில் தெளிவுபடுத்தி இணைக்கப்பட்டிருக்கும் காணொளியை முழுமையாகப் பார்வையிட்டதன் பின்னர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்.

மேலும் இம்முறை ஸ்ரீஜயவர்தபுர பல்கலைக்கழகத்தினால் இரு பாடநெறிகளும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தினால் ஒரு பாடநெறியும் வவுனியா பல்கலைக்கழகத்தினால் ஒரு பாடநெறியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதுகுறித்த தகவல்களையும் வழிகாட்டல் நூல் மூலம் அறிந்துகொள்ளமுடியும். இவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அல்லது மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவிரும்பும் மாணவர்கள் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரையான 7 நாட்களும் மு.ப 8.30 – பி.ப 6 மணிவரை 011-2695301 அல்லது 011-2695302 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு அவசியமான தெளிவுபடுத்தல்களைக் பெற்றுக்கொள்ளமுடியும்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *