சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 48 மாதங்களுக்காக இந்த உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள
அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பு, நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பது மற்றும் ஊழல் அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிக்கொணர்வது இந்த நிதித் திட்டத்தின் நோக்கங்களாகும்.
இந்த உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ மற்றும் பணிப்பாளர் சபையின் அனுமதிக்காக அனுப்பப்படவுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் வேலைத்திட்டம், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதையும், பொருளாதார மீட்சிக்கான அடித்தளத்தை தயாரிப்பதையும், நிலையான வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் நிதி மூல வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதும், வரி கொள்கையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டாகும் போது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியை 2.3 சதவீதமாக அதிகரிப்பதற்கான இலக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள முதலாவது நிதித் தொகை, சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபையின் மீளாய்வின் பின்னர் தயாராகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் மசாஹிரோ நொசாகி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்குவதற்கு இணங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியானது, தனியே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மட்டுமே கிடைக்கவுள்ளது.
மேலதிகமாக சர்வதேச நாணயநிதியத்தின் இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்காளிகள் ஊடாக மேலும் பாரிய அளவு நிதி கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு வேறு வழிமுறைகள் ஊடாக பாரிய அளவு நிதி கிடைக்கப்பெறும்: மசாஹிரோ நொசாகி
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment