Press "Enter" to skip to content

விடயங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. – அமைச்சர் டக்ளஸ் தெளிவுபடுத்தல்!

கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் தொடர்பான ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி A.H.M.D நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு என்னால் வழங்கப்பட்ட குறித்த வாக்குமூலம் தொடர்பாக கடந்த திங்கட் கிழமை(29.08.2022) தங்களின் பத்திரிகையில் வெளியாகிய செய்தி ஏமாற்றம் அளிக்கின்றது என ஈழ் மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாள்ர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர்  விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கையில் –

குறித்த வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் குறித்த செய்தி அறிக்iயிடப்பட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

குறித்த வாக்குமூலத்தில்,
“எம்மைப் பொறுத்த வரையில், இனப்பிரச்சினை என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் ஒரு விதமானதாகவும், ஒப்பந்தத்திற்கு பின்னர் இன்னொரு விதமானதாகவுமே இருக்கின்றது.  குறித்த ஒப்பந்தத்திற்கு முன்னர் இனவாத அரசாங்கமாக மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அது அணுகியிருந்தது.

ஆனால் ஒப்பந்தத்திற்குப் பின்னார் அதில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அரசாங்கத் தீர்மானங்களில் கொள்கை ரீதியான குணாம்ச ரீதியான, அணுகுமுறை ரீதியான மாற்றங்கள் இருப்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். துரதிஸ்டவசமாக அப்போது தமிழ் தலைமைகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டோர் அதனை சரியாக கையாளவில்லை என்பதே என்னுடைய ஆதங்கமாக இருக்கின்றது.

புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என்றால் புண்ணுக்கு வலி என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஆனால் மருந்துக்கு வலி என்ற அடிப்படையிலேயே சக தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைந்திருந்தன.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் உருவாகிய அரசாங்கங்கள் பலவற்றில் அங்கம் வகித்த ஒருவர் என்ற அடிப்படையில், என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பல கட்சிகளை கொண்டு அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றமையினால் அதில் அங்கம் வகிக்கின்ற யாராவது, சில கருத்துக்களை சொல்லலாம். ஆனால் அவை அரசாங்கத்தின் தீர்மானங்களாக இருப்பதில்லை.

அதேபோன்று, தவறுகள் நடைபெறுமானால் அவற்றை நியாயமான முறையில் சுட்டிக் காட்டுகின்றபோது திருத்தப்படுவதற்கான சூழலே காணப்படுகின்றது. ஆனால் இந்தச் சூழலை தமிழ் தலைமைகள் சரியாக கையாள்வதற்கு முன்வராமையினாலேயே பிரச்சினை நீடித்துக் கொண்டிருக்கின்றது என்பதே எனது கருத்து.

அரசியல் உரிமைப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முதல்கட்டமாக முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவோமாக இருந்தால், அதிலிருந்து படிப்படியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கி முன்னோக்கி நகரமுடியும். 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் தேசிய நல்லிணக்கத்தினையும் பரஸ்பர நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும்.

தமிழ் கட்சிகள் பல இணைந்து இந்தியப் பிரதமருக்கு 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளன. இந்தியாவாக இருந்தாலென்ன, ஏனைய யாராக இருந்தாலும் இந்த விடயத்தில் ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்கலாமே தவிர, ஒரு கட்டத்தினை தாண்டி செயற்படுவது நடைமுறையில் சாத்தியமற்றது.

‘அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்’ என்பார்கள், அதுபோன்று எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற நட்பு சக்திகளை தமிழர் தரப்பு மருத்துவச்சி போன்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கான அனுமதி தொடர்பாகவும் கடந்த காலங்களில் இந்த விசாரணைக்குழு முன்னிலையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தவர்கள் கோரிக்ககை முன்வைத்திருந்தமையை அறியக் கூடியதாக இருந்தது.

உரிமைப் போராட்டத்தின் பெயரால் பலரும் உயரிழந்துள்ளார்கள். புலிகள் மேற்கொண்ட சகோதரப் படுகொலையினால் நூற்றுக்கணக்கான டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் போன்ற பல இயக்கங்களை சேர்ந்த போராளிகளும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கந்தன் கருணை போன்ற வதை முகாம்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர், அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுமிருக்கின்றனர். அதைவிட, யுத்தத்தில் அகப்பட்டும் – யுத்தத்தினை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்துவதற்கான தந்திரோபாயமாகவும், தமது பாதுகாப்பிற்கான மனித கேடயமாகவும் புலிகளினால் மக்கள்  பயன்படுத்தப்பட்டதுடன், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரிடம் செல்வதற்கு மக்கள் முற்பட்ட நிலையில் புலிகளினால் சுடப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுமாக, யுத்தம் நிறைவுக்கு வரும் வரை, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

இதுதொடர்பாக, நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசாங்க காலத்தில் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தேன். இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் பெயரால் உயிரிழந்த அனைவரையும் அவரவர்களின் உறவினர்கள் நினைவு கூருவதற்கும் அவரவர் விரும்பிய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்குமான பொது நினைவு தினம் மற்றும் பொது நினைவுச் சின்னம் போன்றவை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.

குறித்த பிரேரணைணை வழிமொழிவதற்கு விருப்பமின்றி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றை விட்டு ஓடி ஒளிந்த நிலையில் இன்னொரு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் குறித்த பிரேரணைணை வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதே நிலைப்பாட்டிலேயே நான் தற்போதும் இருக்கின்றேன். ஆனால் அரசியல் உள்நோக்கங்களுக்காகவும், தென்னிலங்கை மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பான நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வகையிலும் குறுகிய நலன்களுக்காக இவ்வாறான நினைவுகூருதல்கள் பயன்படுத்தப்படுமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரான பண்டிதர் என்று அழைக்கப்பட்ட சின்னத்துரை இரவீந்திரனின் தாயார் அடிப்படை வசதிகள்கூட இல்லாத கொட்டில் வீட்டினுள் வாழ்ந்து வருகின்றார். அவருடைய வாழ்வாதாரம் தொடர்பாக யாரும் இதுவரை கண்டுகொண்டதில்லை. இராணுவத்தினரே வாழ்வாதார உதவிகளை வழங்குவதாக அந்த மூதாட்டியே ஊடகங்களிடம் சொல்லியுள்ளார். இந்நிலையில் புலிகளின் நினைவுகூரல் தினத்தன்று அந்த தாயாரின் வீட்டிற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், கஜேந்திரன் போன்றோர் தனித்தனியாக அங்கே சென்று விளக்கேற்றி ஊடகங்களுக்கு படம் காட்டி விட்டு தென்னங் கன்று ஒன்றையும் வழங்கிவிட்டு வந்துள்ளனர். இவ்வாறான அரசியல் சுத்துமாத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.”
என்று சொல்லபட்ட நிலையில், தங்களின் செய்தியில் என்னால் சொல்லப்பட்ட விடயங்களுக்கு மாறான வகையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் குறித்த வாக்குமூலம் அளிக்கும் சம்பவத்துடன் தொடர்பில்லாத எனது புகைப்படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி, ஈழநாடு பத்திரிகை வாசகர்களை குறித்த செய்தி தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதை, என்னுடைய நீண்டகால தொடர் நிலைப்பாட்டை அறிந்த பலர் என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இதுதொடர்பாக அவதானம் செலுத்தி சரியான செய்தியை வாசர்கள் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

– டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்(ஈ.பி.டி.பி)

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *