இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக 6 மில்லியனுக்கும் அதிக மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
இலங்கை மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிப்பானது ஆரோக்கியமான மற்றும் போதுமான உணவின் அணுகலைக்கட்டுப்படுத்துவதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உணவு பாதுகாப்பற்ற நிலைமை தொடர்பில் உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகிறது. இது பல வருட வளர்ச்சி முன்னேற்றத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலைமையானது ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நாட்டின் திறனை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதாவது சுமார் 30 சதவீத மக்கள் – தற்போது உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் மற்றும் அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.
குறைவடைந்துள்ள உள்நாட்டு விவசாய உற்பத்தி, அந்நியச் செலாவணி இருப்பு பற்றாக்குறை மற்றும் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவை உணவுப் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைச் செலவில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன. இது மக்களின் ஆரோக்கியமான மற்றும் அதிக உணவுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.
பொருளாதார நெருக்கடியானது குடும்பங்களை பசி மற்றும் வறுமையில் தள்ளியுள்ளது. சிலர் முதல் முறையாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளடங்கியுள்ளனர். உலக வங்கி மதிப்பீடுகளுக்கமைய இது சுமார் அரை மில்லியன் மக்களைக் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, 86 சதவீத குடும்பங்கள் மலிவான, குறைவான சத்துள்ள உணவை வாங்குகின்றனர், குறைவாக சாப்பிடுகின்றனர் மற்றும் சில சமயங்களில் உணவை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்றுநோய்க்கு முன்னர், இலங்கை முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் ஏற்கனவே அதிகமாக இருந்தது.
கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், மற்ற நடுத்தர வருமான நாடுகளை விட இலங்கைப் பெண்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 17 சதவீதமானோர் வளர்ச்சி குன்றியதால் மிகவும் குட்டையாக இருந்தனர் மற்றும் 15 சதவீதமானோர் உயரத்துடன் ஒப்பிடும் போது மிகவும் உடல் மெலிவாகக் காணப்பட்டனர். தற்போதைய பொருளாதார நெருக்கடி இதை மேலும் மோசமாக்கும்.
கூடுதலாக, வரட்சி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற காலநிலை மாற்றங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்மையை அதிகரிக்கின்றன.
உலக உணவுத் திட்டம் 1968 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஊட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கும், குடும்பங்களுக்கு உணவு கிடைப்பதற்கு ஆதரவளிப்பதற்கும், சிறு விவசாயிகளின் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கும் செயற்பட்டு வருகிறது.
இவ்வாண்டு ஜூன் மற்றும் டிசம்பருக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்கள் ஆபத்தில் உள்ள 3.4 மில்லியன் மக்களுக்கு ஆதரவளிக்க உலக உணவு திட்டம் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Be First to Comment