Press "Enter" to skip to content

மீள்திரும்பலுக்கு உதவுமா புதிய குழு

கார்வண்ணன்

“தமிழகத்தில் தற்போது முகாம்களில் 58 ஆயிரம் தமிழ் அகதிகள் தங்கியிருக்கின்றனர். அவர்களில் தற்போதைக்கு நாடு திரும்ப விரும்புகின்றவர்கள், வெறுமனே 3 ஆயிரத்து 500 பேர் மட்டும் தான்”

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்துவதற்கான குழுவொன்றை அரசாங்கம் நியமித்திருக்கிறது.

சந்திரகாசன் தலைமையிலான ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவுடன் நடத்திய சந்திப்பின் போதே இந்த குழுவை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க தலைமையிலான இந்தக் குழுவில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் மூத்த அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற  தீர்மானங்கள் பல முன்னரும் எடுக்கப்பட்டிருக்கின்றன. குழுக்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில், பல்வேறு குழுக்களின் செயற்பாடுகள், அவை நியமிக்கப்படும் அறிவிப்புடன் நின்று போகும்.

அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கே குழு என்ன செய்கிறது என்று தெரியாமல் இருக்கும் அல்லது, குழுவின் உறுப்பினர்களுக்கும் தங்களுக்கான வேலை என்னவென்று தெரியாமல் இருக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் செயலணிகள், குழுக்களின் நிலைமைகள் இவ்வாறு தான் இருக்கிறது.

அதனால் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்துவதற்கான குழுவும் எந்தளவுக்கு செயற்திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று, கூற முடியாது.

ஆனால், தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளை நாட்டுக்குத் திருப்பி அழைத்து வருவது, அல்லது மீளக் குடியேற்றும் பணிகளை வெறுமனே, இந்தக் குழுவினால் மட்டும் சாதிக்க முடியாது.

இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ள அமைச்சுக்களின், திணைக்களங்களின் அதிகாரிகள், ஆவண ரீதியான சில பிரச்சினைகளை இலகுபடுத்துபவர்களாக இருக்கலாமே தவிர, தமிழகத்தில் தங்கியுள்ள மக்களை தாயகத்துக்கு அழைத்து வரக் கூடிய செயற்திட்டங்களை வகுக்க, செயற்படுத்தக் கூடியவர்களாக இல்லை.

தமிழகத்தில் உள்ள அகதிகள் நாடு திரும்புவதற்கு தடையாக இருக்கின்ற முக்கியமான பிரச்சினைகள், அவர்களுக்கான ஆவணங்களோ, அதுசார்ந்த விடயங்களோ கிடையாது. அதனையும் தாண்டிய பல பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன.

தமிழகக்தில் அவர்கள் தற்போது அனுபவிக்கின்ற சுதந்திரம், உரிமைகள், போன்றவற்றை விட அதிகமாக இங்கு அனுபவிக்க கூடிய சூழல் உள்ளதென்ற நம்பிக்கை அவர்களுக்கு முதலில் வர வேண்டும்.

அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்படாமல் ஆவண ரீதியாக உள்ள தடங்கல்களை அகற்றக் கூடிய குழுக்களால் எந்தப் பயனும் இல்லை.

தமிழகத்தில் தற்போது முகாம்களில் 58 ஆயிரம் தமிழ் அகதிகள் தங்கியிருக்கின்றனர். அவர்களில் தற்போதைக்கு நாடு திரும்ப விரும்புகின்றவர்கள், வெறுமனே 3 ஆயிரத்து 500 பேர் மட்டும் தான்.

இவர்களைக் விரைவாக நாடு திருப்பி அழைத்து வருவதற்கான செயற்திட்டங்கள் கூட இலங்கை அரசாங்கத்திடமும் கிடையாது. இந்தியாவிடவும் அது கிடையாது. அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் பணியகத்திடமும் இல்லை.

இந்தநிலையில் அதிகளவானோரை விரைவாக திருப்பி அழைத்து வரும் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக செல்லும் போது, போர் மட்டும் தான் முக்கியமான பிரச்சினையாக இருந்தது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். இப்போது, போர் முடிவுக்கு வந்து விட்டது.

அமைதி நிலவுகிறது என்ற போதும், அகதிகள்  நாடு திரும்புவதற்குப் பெருமளவில் விரும்பவில்லை.

அதற்கு நிலையான அமைதி, தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு, உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது முக்கியமானதொரு காரணமாக இன்றைக்கும் நீடிக்கிறது.

இப்போது மற்றொரு புதிய பிரச்சினை உருவாகியிருக்கிறது. பொருளாதார ரீதியாக நாடு சந்தித்துள்ள நெருக்கடிகள், மக்களின் அன்றாட வாழ்வைப் பெரிதும் பாதிக்கிறது.

நிலையான வருமான வசதிகளைக் கொண்டிருக்கும் மக்களைக் கூட, இந்தப் பொருளாதார நெருக்கடி ஆட்டிப் படைக்கின்ற நிலையில், இந்தியாவில் இருந்து திரும்பியவர்களின் நிலையை மதிப்பிடுவது ஒன்றும் கடினமல்ல.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியர்களால், இங்கு இயல்பு நிலைக்குத் திரும்ப குறிப்பிட்ட காலம் தேவைப்படும்.

ஆனாலும், தொழில் ரீதியாகவும், தேவைகள் ரீதியாகவும் அவர்கள், தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார நெருக்கடிகள் அவர்களை கடுமையாக அழுத்துகிறது. நாடு திரும்ப விரும்புகின்ற மக்களுக்கு இவ்வாறான நிலை ஒருபோதும், நம்பிக்கையூட்டும் செய்தியாக இருக்காது.

பொருளாதார செழிப்புகள் மங்கி உணவுப் பொருட்களுக்கும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு தேசத்தை நோக்கி அவர்கள் திரும்பி வரமாட்டார்கள்.

யாருக்குத் தான், நெருக்கடிக்குள்- பஞ்சத்துக்குள் சிக்கிக் கொள்ள விருப்பம் வரும்? உள்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால், ஏற்கனவே நாடு திரும்பிய அகதிகள் பலர், தமிழகத்தை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

மீளவும் தமிழகத்தை நோக்கிச் செல்லுகின்ற இந்த நிலையானது, அங்கிருக்கும் அகதிகளுக்கு நாடு திரும்புவதற்கான ஊக்கத்தை அளிக்காது.

நூற்றுக்கும் அதிகமானோர் அண்மைய பொருளாதார நெருக்கடிகளால் படகுகளின் மூலம் மீளவும் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.

ஆனால், விமானம் மூலம், தமிழகத்துக்குத் திரும்பியவர்கள் அதைவிட மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. அது பற்றிய சரியான கணக்கெடுப்புகள் வெளியாகவில்லை.

இவ்வாறு தமிழகம் நோக்கி மக்கள் செல்லுகின்ற நிலையை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. அது இந்தியாவின் தேவையற்ற அழுத்தங்கள் அல்லது தலையீடுகளுக்கு வழிவகுக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது.

மீள் திரும்பலை துரிதப்படுத்துவதற்கான குழுவை நியமித்திருப்பதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கக் கூடும்.

அதேவேளை, மீள் திரும்பலைத் துரிதப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டாலும், அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் இலங்கையில் தனது நேரடிச் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவிருப்பது, அதற்கு தடைகளை ஏற்படுத்தலாம்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஐ.நாவுடன் முரண்பட்டுக் கொண்டதால், இந்த ஆண்டு இறுதியுடன் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம் தீர்மானித்து விட்டது.

அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சில வேலைத் திட்டங்களை ஐ.நா முன்னெடுத்துள்ள நிலையில், மீளக் குடியேறுபவர்களின் எதிர்காலம் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் பிற வசதிகள் குறித்த அச்சமும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகள் நாடு திரும்பும் போது, அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு விடயமாக இருப்பது அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம் அளித்து வந்த பாதுகாப்பு.

ஐ.நா தனது இந்த நேரடிச் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் போது அல்லது, மறைமுகமாக இயங்கும் போது, அந்த நம்பிக்கையை பெற முடியாது. அது அகதிகளின் மீள் திரும்பலுக்கு தடையாக இருக்கப் போகிறது.

இதுபோன்ற அடிப்படைப் பிரச்சினைகள் பல இருக்கின்ற நிலையில், அவற்றின் மீது கவனம் செலுத்தாமல், மீள திரும்பலைத் துரிதப்படுத்த அரசாங்கம் குழுவொன்றை அமைத்துள்ளது பயனளிக்கும் ஒரு நகர்வாக இருக்கும் போலத் தெரியவில்லை.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *