Press "Enter" to skip to content

மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் – இலங்கை தொடர்பில் இன்று விவாதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

இந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லட் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையினை முன்வைக்கவுள்ளார்.

கூட்டத்தொடரின் இன்றைய முதல் நாளில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.

2020 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட 46/1 பிரேரணை செயற்படுத்தப்படும் விதம், மனித உரிமைகள் விடயங்கள் என்பன குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டவுள்ளார்.

அத்துடன் இலங்கை தொடர்பான விவாதமும் இன்றைய தினம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள எழுத்துமூல அறிக்கையில், மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களை பொறுப்புக்கூறல் செய்வதற்கும், உண்மை நீதி மற்றும் இழப்பீட்டை பெறுவதற்கும் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் கொண்டுள்ள உரிமையை உறுதி செய்வதற்கான நிலைமாறு கால நீதி பொறிமுறையை உருவாக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு கட்டமைப்புக்களை மேற்கொள்ள ஆழமான மறுசீரமைப்புக்கள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

அமைதியான போராட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் மீள அமுல்படுத்தப்பட்டமை என்பன குறித்தும் அந்த அறிக்கையில் கண்டித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காணுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் சார்பில் ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *