பளை பிரதேசத்தில் உள்ள எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் மத்தியில் உணர்வு ரீதியான குழப்பங்களை ஏற்படுத்தி சுயலாப அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்களினால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற இவ்வாறான செய்திகள் தொடர்பில் ஊடகங்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், சில ஊடகங்களில் வெளியான குறித்த செய்தி தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் வினவியபோது, துறைசார்ந்த அமைச்சர்களுக்கு இதுதொடர்பான எந்தவொரு திட்டங்களும் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகளை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை சேர்ந்த காணிகளற்ற மக்களுக்கும், காணாமல் போனவர்களின் நேரடி உறவினர்களில் காணிகள் அற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 13.09.2022
Be First to Comment