Press "Enter" to skip to content

இலங்கை குறித்த இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள்

நல்லிணக்கத்திற்கு மிகவும் அவசியமான அரசியல் அதிகாரப்பகிர்வு, அனைத்துப்பிரஜைகளுக்கும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்தல் தொடர்பில் கொண்டிருக்கும் கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டுமென்றும், மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் மற்றும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள அனைத்து மாகாணசபைகளும் செயற்திறனாக இயங்குவதை உறுதிசெய்தல் ஆகியவற்றின் மூலம் உள்ளுராட்சி நிர்வாகத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டுமென்றும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான உள்ளகப்பொறிமுறையில் சுயாதீனத்துவம், பக்கச்சார்பற்றதன்மை, வெளிப்படைத்தன்மை என்பன போதியளவிற்கு உறுதிப்படுத்தப்படவில்லை என்று அப்பிரேணையில் சுட்டிக்காட்டியுள்ள இணையனுசரணை நாடுகள், கடந்தகால நிகழ்வுகளைக் கையாள்வதற்கும் பொறுப்புக்கூறல், நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, மீள்நிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் நீதித்துறை சார்ந்ததும் நீதித்துறை சாராததுமான செயற்திறன்மிக்க பொறிமுறையொன்று இன்றியமையாததாகும் என்று தெரிவித்துள்ளன.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது. இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா மற்றும் மாலாவி ஆகிய 6 இணையனுசரணை நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணையின் வரைபு நேற்று பகிரங்கப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தி, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளை மீளநினைவூட்டும் வகையில் இப்பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இறையாண்மையுடைய, சுயாதீனமானதும் ஐக்கியமானதும் சுயாட்சியுடையதுமான இலங்கையை அங்கீகரிக்கும் அதேவேளை, மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசினதும் முக்கிய பொறுப்பாகும் என்று அப்பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை முகங்கொடுத்துவரும் மிகத்தீவிரமான பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நெருக்கடி மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பவற்றை ஏற்பதாகவும், இருப்பினும் தீவிர இராணுவமயமாக்கல், ஆட்சிநிர்வாகத்தில் நிலவும் பொறுப்புக்கூறலின்மை மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்கப்படாமை ஆகியன உள்ளடங்கலாக தற்போதைய நெருக்கடி தோற்றம்பெறுவதற்குப் பங்களிப்புச்செய்த காரணிகளைக் கண்டறிந்து தீர்வை வழங்கவேண்டியதும் தற்போதைய மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் உள்ளடங்கலாக ஊழல்மோசடிகளுக்குக் காரணமானவர்களை விசாரணைக்குட்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதும் அவசியம் எனவும் அப்பிரேரணை ஊடாக இணையனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

‘அமைதிவழிப்போராட்டங்கள் அபிவிருத்தியிலும் தேர்தல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளடங்கலாக ஜனநாயகக்கட்டமைப்பின் செயற்திறனை வலுப்படுத்துவதிலும் நேர்மறையான பங்களிப்பை வழங்கக்கூடும் என்பதுடன் போராட்டங்களில் கலந்துகொள்வதென்பது கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான உரிமையை அனுபவிப்பதன் ஓர் முக்கிய வடிவமாகும்’ என்று பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், கடந்த 2021 ஓகஸ்ட் மாதத்திலிருந்து நாட்டில் 4 முறை அவசரகாலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளது.

அதேபோன்று அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை வரவேற்கும் அதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச, ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதித்துறை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் என்றும் இணையனுசரணை நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

‘நல்லிணக்கத்திற்கு மிகவும் அவசியமான அரசியல் அதிகாரப்பகிர்வு, அனைத்துப்பிரஜைகளுக்கும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்வதில் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் மற்றும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள அனைத்து மாகாணசபைகளும் செயற்திறனாக இயங்குவதை உறுதிசெய்தல் ஆகியவற்றின் மூலம் உள்ளுராட்சி நிர்வாகத்திற்கு மதிப்பளிக்குமாறும் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்’ என்று புதிய பிரேரணையில் தெரிவித்துள்ள இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகள், உட்கட்டமைப்பு வசதிகளின் மீள்நிர்மாணம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற வசதிகள், வாழ்வாதார உதவிகள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன.

அதேவேளை பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்கள் தொடர்பில் அரசுகள் கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு ஏற்புடையதாக அமையவேண்டும் என்று இணையனுசரணை நாடுகள் தெரிவித்துள்ளன. அதுமாத்திரமன்றி கடந்தகால நிகழ்வுகளைக் கையாள்வதற்கும் பொறுப்புக்கூறல், நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, மீள்நிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் நீதித்துறை சார்ந்ததும் நீதித்துறை சாராததுமான செயற்திறன்மிக்க பொறிமுறையொன்று இன்றியமையாததாகும் என்றும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடனும் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்களுடனும் இலங்கை அரசாங்கம் பேணிவரும் இடைத்தொடர்பை வரவேற்கும் அதேவேளை, அத்தகைய இடைத்தொடர்பும் கலந்துரையாடல்களும் தொடர்ந்து பேணப்படவேண்டுமென ஊக்குவிக்கின்றோம். அத்தோடு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் வலியுறுத்துகின்றோம். மேலும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகள்மீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து எமது கரிசனையை வெளிப்படுத்துவதுடன் கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள், முதியோர்கள், விசேட தேவையுடையோர் உள்ளடங்கலாக பின்தங்கிய சமூகத்தினர் மற்றும் இலகுவாகப் பாதிப்படையக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றோம்’ என்றும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பான தமது புதிய பிரேரணையில் குறிப்பிட்டுள்ளன.

 

மேலும் அமைதிப்போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள், கைதுகள், அரசாங்க ஆதரவாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உள்ளடங்கலாகக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் பதிவாகிவரும் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து தமது பிரேரணை வரைபில் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இணையனுசரணை நாடுகள், அவைகுறித்து சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளன. அதுமாத்திரமன்றி சிவில் அரச செயற்பாடுகளில் தொடரும் மிகையான இராணுவமயமாக்கல், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான நீதித்துறை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் வலுவிழப்பு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அடையப்பட்டுள்ள மிகச்சொற்பளவிலான முன்னேற்றம், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பட்டாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள், நினைவுகூரல் செயற்பாடுகளில் ஈடுபடுவோர்மீதான அடக்குமுறைகள் மற்றும் கண்காணிப்புக்கள், கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம்செய்வதில் முஸ்லிம்களின் மதச்சுதந்திரம் மீறப்பட்டமை என்பன தொடர்பிலும் அவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன.

பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான உள்ளகப்பொறிமுறையில் சுயாதீனத்துவம், பக்கச்சார்பற்றதன்மை, வெளிப்படைத்தன்மை என்பன போதியளவிற்கு உறுதிப்படுத்தப்படாமை குறித்தும் மனித உரிமைகள் சார்ந்த முக்கிய வழக்குகளின் விசாரணைகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தாமதப்படுத்தப்படுகின்றமை குறித்தும் அப்புதிய பிரேரணை வரைபில் விசேடமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் ஆதாரங்களைத்திரட்டும் நடவடிக்கையையும் அப்பிரேரணை அங்கீகரித்துள்ளது.

‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் இயக்கங்களுக்கு மீள் உத்வேகமளிக்கப்படவேண்டியது அவசியம் எனும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். மேலும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்குமாறும் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான இடைவெளி மற்றும் அனைவருக்குமான மதரீதியான சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன தொடர்பிலான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றை விரிவுபடுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்வதுடன் அதுகுறித்து எதிர்வரும் 53 ஆவது மற்றும் 55 ஆவது கூட்டத்தொடர்களில் வாய்மொழிமூல அறிக்கையையும் 54 ஆவது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கையும் 57 ஆவது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோருகின்றோம்’ என்று இணையனுசரணை நாடுகள் அப்புதிய பிரேரணையில் குறிப்பிட்டுள்ளன

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *