Press "Enter" to skip to content

இலங்கை தொடர்பான பூச்சிய வரைவு தீர்மானம் – உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்த அழைப்பு!

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பூச்சிய வரைவு தீர்மானம் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை மீண்டும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்மானத்தில், தமிழ் மக்கள் போர் முடிவுக்கு வந்த – 2009 ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக கோரி- வலியுறுத்தி வரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துவது தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ நாடுகளான பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மலாவி, வடக்கு மசிடோனியா, மொண்டினீக்ரோ நாடுகள் இந்த வரைவு தீர்மானத்தை சமர்ப்பித்தன.
இதில், நல்லிணக்கம், அனைத்து மக்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதை உறுதிப்படுத்துதல், அதிகாரப் பகிர்வு தொடர்பான கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றவும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வலியுறுத்தும் அதேநேரம், 13ஆவது திருத்தத்துக்கு அமைவாக வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் திறம்படசெயல்படுவதை உறுதி செய்யவும் வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், இலங்கையில் நடைபெற்றவை எனக் கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு விரோதமான செயல்கள் குறித்து எதிர்கால விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கவும் – பாதுகாக்கவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உள்ள திறனை நீடிக்கவும் வலுப்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது.
அத்துடன், தீவிர இராணுவ மயமாக்கல், நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் கடுமையான மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விலக்கு உட்பட இலங்கையின் நெருக்கடிக்கு பங்களித்த அடிப்படைக் காரணிகள் மற்றும் மூல காரணிகளை நிவர்த்தி செய்தல் வேண்டும். சிவில் அரசாங்க செயல்பாடுகளை தொடர்ந்து இராணுவ மயமாக்கல், நீதித்துறை மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான முக்கிய நிறுவனங்களின் சுதந்திரமற்ற போக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நீண்டகால குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் முன்னேற்றமின்மை, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான கண்காணிப்பு -அச்சுறுத்தல் மற்றும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான தடை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை துன்புறுத்துதல்கள் போன்றவை குறித்து வரைவு தீர்மானம் ஆழமான கவலைகளை வெளியிட்டுள்ளது.
தவிர, பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை இரத்து செய்வதற்கும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான இலங்கையின் கூற்றுக்களை இந்தத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது.
எனினும், பல ஆண்டுகளாக சர்வதேச சட்டத்துக்கு அமைவாக சட்டம் திருத்தப்படும் என்று இலங்கை சர்வதேச சமூகத்துக்கு பல உறுதிமொழிகளை அளித்துள்ளது.
இன்றுவரை, போதுமான சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை என்பதையும் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
தனிநபர்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும், கைதிகள் சித்திரவதை – பாலியல் வன்புணர்வு மற்றும் பிற மோசமான சிகிச்சைக்கு உள்ளாக்குவதற்கும் ஒரு கருவியாக இலங்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துகிறது என தீர்மானம் கூறுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை இலங்கை எட்டியுள்ளது என்ற அறிவிப்பை தீர்மானம் வரவேற்றுள்ளது.
அத்துடன், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தினசரி ஊதியம் பெறுபவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற நபர்கள் உட்பட மிகவும் பின்தங்கிய தனிநபர்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று வரைவில் சொல்லப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் மனித உரிமைகள் குறித்த கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை தொடருமாறு ஐ. நா.மனித உரிமைகள் பேரவையை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *