தம்மைப் பராமரிப்பதற்காக தனது மகள்கள் 200,000 ரூபாவைக் கோருவதாக நேற்று 82 வயதுடைய ஏழு பெண் பிள்ளைகளின் தந்தையொருவர், பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனக்கு உதவுமாறு அவர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்தார்.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான மருத்துவச் செலவுக்காக தன்னிடம் இருந்த ஒரே காணியை விற்றதாகவும், சிகிச்சை செலவு போக மிகுதி ரூ.400,000 தன்னையும் மனைவியையும் இதுவரை பராமரித்து இளைய மகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
தற்போது பணமில்லாத நிலையில் தன்னையும் மனைவியையும் பிள்ளைகள் தனியான வாடகை வீட்டில் விட்டுச் சென்று விட்டதாகவும் தம்மை பராமரிக்க எவரும் முன்வரவில்லை என்றும் தந்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிசார் அவரது மகள்களை வரவழைத்து, விசாரணை செய்தபோது அவர்கள் அனைவரும் நன்றாக வாழ்கிறார்கள் என்பதை பொலிஸார் அறிந்து கொண்டனர் . வயோதிப தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை குறித்து அவர்களுக்கு விளக்கமளித்த OIC கபில சேனாநாயக்க, அவ்வாறு செய்ய மறுத்தால் நீதிமன்றத்தின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .
இதனையடுத்து, பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் மகள்களில் ஒருவர் தனது தந்தையை கவனிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
Be First to Comment