தன்னுயிரை இழந்தாலும் இன்னும் ஒருவரின் வாழ்விற்கு ஔியேற்றிச் செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கின்றது.
இவ்வாறான அரிய சம்பவம் ஒன்று பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது
அரலகங்வில கல்தலாவ பிரதேசத்தில் வசித்து வந்த ருவன் சந்தன என்ற 31 வயதான திருமணமான இளைஞர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி இரவு திடீர் விபத்து ஒன்றுக்கு முகம் கொடுத்து பொலன்னறுவை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் பலத்த காயங்களுடன் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தினங்கள் அவர் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதும் அவரது மூளை சாவடைந்துள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இந்தநிலையில், அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றைக் கொண்டு மேலும் மூன்று பேரின் உடல் நிலையை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் யோசனை தெரிவித்த நிலையில், இளைஞரின் குடும்பத்தாரிடம் அதற்கான அனுமதி கோரப்பட்டது.
அதற்கு குடும்பத்தினர் அனுமதி வழங்கிய நிலையில், விசேட மருத்துவ நிபுணர்களின் உதவியுடன், குறித்த இளைஞரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் என்பவற்றை பெற்று மேலும் மூன்று பேரின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Be First to Comment