Press "Enter" to skip to content

தலைவரைபோல் தன்னை கற்பனை செய்துகொள்வது சுகாஸின் கோமாளித்தனம்..! மூத்த போராளி பஷீர் காக்கா சாட்டை..

மாவீரர் நினைவேந்தல்களில் உரையாற்றுவதன் மூலம் தன்னை ஒரு தேசிய தலைவர்போல காட்ட முயற்சிப்பது சுகாஸின் கோமாளித்தனம். என கூறியிருக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளியான பஷீர் காக்கா, திலீபனின் ஆன்மாவை மட்டுமல்ல மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஆன்மாவையும் கொச்சைப்படுத்திவிட்டனர். அதை அவருடைய மகன் கைகட்டி வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நடைபெற்ற நல்ல விடயங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. குறிப்பாக பொத்துவிலில் இருந்து புறப்பட்ட வாகனப்பேரணி வடகிழக்குமக்களின் மத்தியில் தேசியத்தை வலுப்படுத்தும் என்பது எமது நம்பிக்கை.

அதுபோல் அடுத்த சந்ததியினர் திலீபன் யார்? எனக் கேட்டால் தியாகத்தில் ஆகுதியானவன் பற்றிக் கட்டாயமாக பெற்றோர் சொல்லுவர். நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியில் எம்மை இனம் காட்டாத முறையில் கிழக்கு மாகாணத்திற்குச் சென்றோம். பொத்துவில் வரை பயணித்து, விடுதலை உணர்வுள்ளவர்களோடு இரகசியமாகத் தொடர்பை ஏற்படுத்தி படிப்படியாக போராளிகளை இணைத்துப் படையணிகளாக அடியெடுத்து வைத்தோம்.

எங்களுக்கு முன்னதாகவே பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கனகரத்தினத்தின் மகன் ரஞ்சன் அவரது தந்தை மீது இயக்கம் நடவடிக்கை எடுத்த பின்னரும் விடுதலையே தனது இலக்கு என இரா.பரமதேவாவுடன் பயணித்தார். இவரும் பரமதேவாவும் பின்னர் புலிகளில் இணைந்து மாவீரர் ஆகினர்.

இத்தகைய வரலாற்றைக் கொண்ட பொத்துவிலில் இருந்து பகிரங்கமாக விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் ஆகுதியாகிய திலீபனின் ஊர்தி புறப்பட்டது மகிழ்ச்சியே. இதுபோல தீவக நினைவேந்தல் குழுவினர் தீவகத்தின் பல பகுதிகளிலும் பயணித்து ஊர்தியுடன் வந்தடைந்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் திலீபனின் இல்லம் இருந்த ஊரெழுப் பகுதியிலிருந்து ஊர்திப்பவனியாக வந்தனர்.

பொத்துவில் – பொலிகண்டி அமைப்பினரின்ஏற்பாட்டிலான ஊர்தி திலீபனின் நினைவு நாளன்று ஊரெழுவில் இருந்து புறப்பட்டு தியாகி சிவகுமாரனின் சிலையடியில் அஞ்சலித்து நினைவுத்தூபியை வந்தடைந்தது. ஏனைய மாவட்டங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத்திலும்,

அரசியல் கட்சியான முன்னணியினர் தூபிக்கு பின்னாலும்இரத்த தானங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பெருமளவிலானோர் இதில் பங்களித்தமை மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது. இதுபோல ஓவியப் போட்டியும் வரவேற்கத்தக்க நிகழ்வே. அடையாள உண்ணா விரதம் இருந்தோருக்கு எமது அடுத்த சந்ததியினரான பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக வந்து குளிர்பானம் வழங்கி முடித்து வைத்தனர்.

எல்லாமே திருப்தி அளித்தாலும தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை இந்நிகழ்வில் வெளிப்படுத்தியதை திலீபனின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதனை வலியுறுத்திக் கூறுகிறோம்.முதல் நாள் நிகழ்வை பொதுவாக நடத்துவதில் எந்த சங்கடமும் இல்லை என முன்னணியின்ஏற்பாட்டுக் குழுப் பொறுப்பாளர் பொன் மாஸ்டர் கூறியிருந்தார். அவரது தரப்பில் பெரும்பாலும் அவர் மட்டுமே திலீபனைக் கண்டிருப்பவர்.

இவரது வார்த்தையை நம்பி இவ்வருடம் ஆரம்ப நிகழ்வுக்குச் சென்றோம். சட்டத்தரணி சுகாஷ் வரும்வரை எல்லாமே சுமுகமாக நடந்தன. இவர்ஒலிவாங்கியை எடுத்ததும் தமது முன்னாள் சகாக்களான மாநகர மேயர் தலைமையிலான அணியினரை சாடத் தொடங்கினார். இவர் அடிக்கடி பயன்படுத்தும் ஒட்டு குழு என்ற பதமும் இதில் அடங்கியிருந்தது. எமது எதிர்பார்ப்பு தகர்ந்தது.

திலீபனின் புனிதமான நினைவு நிகழ்வில் இவ்வாறான அசிங்கம் நிகழ்வதை மாமனிதர் குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார். அவரோடு உத்தியோகபூர்வமாக பேச்சு வாரத்தை நடத்த சீலன் தலைமையில் முதன் முதல் சென்ற 4 பேர் கொண்ட அணியில் கலந்து கொண்டவன் என்ற வகையில் இதனை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

அவர் எம்மோடு பழகிய விதம் போராளிகள் பற்றி அவரது மனதில் இருந்த உயர்வான கணிப்பு எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டவன் என்ற வகையில், சட்டத்தரணி சுகாஷ் நடந்து கொண்ட விதம் திலீபனின் ஆன்மாவை மட்டுமல்ல மாமனிதர் குமாரின் ஆன்மாவையும் கொச்சைப்படுத்துவதாகும் என மனவேதனையோடு மீண்டும் உறுதிப்படுத்திக் கூறுகின்றேன்.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்குகளை அமரர் குமார் எந்த விதமான கொடுப்பனவும் வாங்காமல் வாதாடி விடுவித்ததை நான் நன்றியுடன் நினைவுபடுத்துகின்றேன். அவரது புகழை மாசுபடுத்தும் வகையில் அவரது மகன் கண்ணெதிரே நடைபெறும் சம்பவங்களை கண்டும் காணாமல் இருந்தது மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது.

சுகாஷ் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பேசுவது, மாவீரர் நாள் நிகழ்வில் தேசியத் தலைவர் உரையாற்றுவதை போல் தன்னைக் காட்ட முனைவது அடுத்த கோமாளித்தனம். தேசியத்தலைவர் பொது எதிரிகள் பற்றியே மாவீரர் நாள் நிகழ்வில் சுட்டிக்காட்டியிருப்பார். சுகாஷின்உரை இலக்குத் தவறி தமிழ் தரப்பை நோக்கியது. அதற்கு நினைவேந்தல்கள் தவிர்ந்த ஆயிரம் மேடைகளை அமைக்கலாம்.

சுகாஷின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முன்னாள் போராளி பொன் மாஸ்டர் முனைந்தது அடுத்த அதிர்ச்சி. முதல் நாள் அளித்த உறுதி மொழிக்கு மாறானது. சுகாஷின் நடவடிக்கையே பொதுக் கட்டமைப்பு ஒன்றை அவசரமாக ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்தியது. இவ்வளவு நாளும் தமிழரின் கடைசித் தலைவர் கஜேந்திரகுமார் என்று கூறி வந்த அவர், இப்போது தன்னையும் தேசியத் தலைவராகக் கற்பனை செய்வது சிறுபிள்ளைத்தனம்,

அன்று அந்த நிகழ்வை அவர் கொச்சைப்படுத்தாமல் இருந்திருந்தால் பொதுக் கட்டமைப்புக்கான தேவையே இருந்திருக்காது. மேலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே திலீபனின் நிகழ்வை சச்சரவில்லாமல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற நோக்கில் தீவக நினைவேந்தல் குழுவினர் சில தரப்பினரை அணுகினர். தூபி அமைந்திருக்கும் இடம் மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் நகர முதல்வரையும் சந்தித்தனர்.

அவர் நகரின் முதல் பிரஜை என்ற வகையில் நகரபிதா எனவும் அழைக்கப்படுவார். அதன் அர்த்தத்தைச் சரியாக அவர் உணர்ந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. இப்போது நாம் ஆட்சியில் இருப்பதால் நாமே இதனைச் செய்யப் போகிறோம் என்று கூறியதன் மூலம் ஏனைய தரப்பினரை அணுகும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். நகர பிதா என்ற வகையில் பொதுக் கட்டமைப்புக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள்,

அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அவர்களால் உருவாகும் கட்டமைப்பிடம்பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு தம்மிடம் இருந்து கோரும் உதவிகளை இயன்றவரை செய்து தருகிறோம் என்று ஒதுங்கி இருக்க வேண்டும்.நினைவு தூபிப் பகுதியில் தீவக நினைவேந்தல் குழுவினர் சிரமதானப் பணிகளை மேற்கொள்கையில் முதல்வர் தரப்பும் இணைந்து கொண்டது.

இந்நிலையில் முன்னணி தரப்பு தமது நிகழ்ச்சி நிரலை வெளியிட்டனர். இதனால் விளையப் போகும் விபரீதத்தை உணர்ந்து கொண்ட தீவகக் குழுவினர் என்னுடன் தொடர்பு கொண்டனர். இந்நிலையில் இரு தரப்புகளுக்கும் இடையில் சிறு சிறு முரண்பாடுகள் தோன்றின. முதல்வர் நாட்டில் இல்லாதபடியால் அவரது தரப்பைச் சேர்ந்த பார்த்தீபனைத் தொடர்பு கொண்டபோது எந்த முடிவெடுத்தாலும் தமக்குச் சம்மதமே என்றார்.

இதன்படியே நான் பொன் மாஸ்டருடன் தொடர்பு கொண்டேன்.சுகாஷ் பரபரப்புக்காக எதையும் சொல்வார். 13வது திருத்தத்திற்கு எதிராகவும் ஒற்றை ஆட்சியை எதிர்த்துமே திலீபன் உண்ணா நோன்பினை மேற்கொண்டார் என்றும் கண்டுபிடித்தார். நவம்பர் மாதம் 14ஆம் திகதி 1987இல் தான் 13வது திருத்தம் பாராளுமன்றில் நிறைவேறியது திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தது செப்டம்பர் 15ஆம் திகதி.

பொதுக்கட்டமைப்பின் உண்ணா விரதம் முடித்து வைக்கப்பட்டதும் குரு முதல்வரிடமும் வேலன்சுவாமிகளிடமும் ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்க முனைந்தனர். ஒலிபெருக்கியின் சத்தம் அதிகமாக இருந்ததால் சற்றுக் குறைக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் சத்தத்தை அதிகரித்தனர். அவர்களின் நோக்கம் சீண்டி விடுவதன் மூலம் பொதுக் கட்டமைப்பினை நிதானம் இழக்க வைப்பது தான். இருவருக்கு உருவேற்றி என்னிடம் அனுப்பி வைத்தனர்.

அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு “நான் என்ன பதில் சொன்னால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ அதை நான் சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன். “அப்படியானால் முன்னாள் போராளி என்று சொல்லாதீர்கள்” என்று கடும் தொனியில் அவர்களிருவரும் என்னை எச்சரித்தனர். “நான் எப்போதுமே மாவீரர் அறிவிழியின் தந்தை என்று தான் என்னை அறிமுகப்படுத்துவதுண்டு” என்று பதில் சொன்னேன்.

“அப்படியானால் முன்னாள் போராளி என்று உங்களைக் குறிப்பிட வேண்டாம் என ஊடகங்களுக்குச் சொல்லுவது தானே” என்று கேட்டனர். நான் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக்கூடாது என உத்தரவிடுகின்றனர் முன்னணியினர் எனப் புரிந்து கொண்டேன்.“நான் மாவீரரின் தந்தை என்று கூறுவதை உங்கள் ஒருவராலும் மாற்ற முடியாது” எனக்கூறி அவர்களை அனுப்பிவைத்தேன்.

இச்சம்பவம் நடக்கும் போது ஆத்திரமடைந்த பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர் தனுவை முன்னணியினர் அடையாளம் கண்டு கொண்டனர்.26ஆம் திகதி மறவன்புலவு பிரபாகரன் தூக்குக்காவடியை ஏற்பாடு செய்து கொண்டு வந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டுகளிலும் அவர் இதனை ஒழுங்கமைத்திருந்தார். தூக்குக் காவடியில் தொங்கிக் கொண்டு வருவோர் காவடி ஆடியபடியே திலீபனின் உருவப்படத்துக்கு மாலை இடுவதை தொடர்ச்சியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பவர்கள் கண்டிருப்பார்கள்.

தங்களின் தமிழ் உணர்வை வெளிப்படுத்த உடல் வலியையும் பொருட்படுத்தாது காவடி எடுத்து வருவோரை உடனடியாக மாலையிட்டு அஞ்சலி செலுத்த விடுவது வழமை. இந்த வருடமும் அதன் தாற்பரியத்தை உணராத முன்னணியினர் இடையூறு விளைவித்தனர். தங்களிடம் ஏற்கனவே அனுமதி பெறவில்லை என ஒருவர் குற்றம் சாட்டினார் ஒருவர். தூக்குக்காவடி ஆடியபடியே வரும் போது பொதுச் சுடர் அவர்கள் நெஞ்சில் முட்டும் அபாயம் இருந்தது எனவே அதனைச் சற்று தள்ளி வைக்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்ததால் இழுபறி ஏற்பட்டது.

இந்த தள்ளு முள்ளினால் முன்னணியைச் சேர்ந்த ஒருவருக்கு நெஞ்சில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். திலீபனின் நினைவிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றமை வருத்தமளிக்கிறது. பொதுக் கட்டமைப்பில் தீவக நினைவேந்தல் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் தனுவை, முன்னணியினர் மோசமாகத் தாக்கினர் என்ற விடயத்தையும் ஆழ்ந்த மன வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

மாமனிதர் குமார் இருந்திருந்தால் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து தூக்குக் காவடியினரை வரவேற்று அஞ்சலி செலுத்த வைத்திருப்பார் என்பது நிதர்சனமான உண்மை. குரு முதல்வர், வேலன் சுவாமிகளை மலரஞ்சலி செய்ய விடாது வேண்டுமென்றே தடுத்தமை, வேலன் சுவாமிகளை தூசண வார்த்தைகளால் திட்டியமை போன்றவை மிக அநாகரிகமான செயற்பாடுகள். இவர்கள் இருவரும் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் என்பதாலேயே தடுக்கப்பட்டார்கள்.

முன்னாள் போராளிகளாக இருந்தாலும் தேர்தல் அரசியலில் ஈடுபபவர்கள் என்ற ரீதியில் ஜனநாயக போராளிகள் தரப்பினரையும் மறவன் புலவு பிரபாகரனையும் இக்கட்டமைப்பினுள் நாம் உள்வாங்கவில்லை. வீணான சச்சரவுகளை முன்னணியினர் கிளப்புவர் என்பதற்காகவே நாம் இவ்வாறு நடந்து கொண்டோம். இறுதி யுத்தத்தின் பின்னர் திலீபனின் நினைவேந்தலை முதன் முதலில் ஏற்பாடு செய்து நடத்தியது மறவன் புலவு பிரபாகரனும் ஜனநாயகப்போராளிகள் கட்சியினரும் தான் என்பதற்கு ஊடக செய்திகளும் ஆதாரமாக உள்ளன.

ஆயினும் இக்கட்டமைப்பில் நான் இருக்கிறேன் தானே என்ற திருப்தியுடன் இந்தத் தம்பிகள் விலகி இருந்தனர். முதலில் ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்ற பார்த்தீபனையும் பொதுக் கட்டமைப்பில் இணைக்கவில்லை.பிரச்சனை இல்லாமல் நிகழ்வை நடத்த முனைகையில், தான் பொதுக் கட்டமைப்பை கண்காணித்து வருவதாக நகர முதல்வர் கூறியமை விசனத்தை ஏற்படுத்தியது. நாம் எந்தக் கட்சியையோ அணியையோ சாராதவர்கள் என சுட்டிக் காட்டினோம்.

அதுவும் இக்கட்டமைப்பின் தலைவராக நல்லை குருமகாசன்னிதானம் விளங்குகையில் இப்படி ஒரு அறிவிப்பை மாநகர முதல்வர் தெரிவித்தமை துரதிஷ்டவசமானது. அரசியலில் ஈடுபடுவோர் பலதையும் பத்தையும் பேசுவர் என்ற வகையிலேயே இதனையும் நோக்க வேண்டியுள்ளது. தமக்கு எதிரானவர்கள் எனக் கருதுவோரை இந்தியாவின் கைக்கூலிகள் எனக் கூறுவது முன்னணியினரின் வழமை.

கஜேந்திரகுமாரோ மற்றும் முன்னணியின் பிரமுகர்கள் எவருமோ இந்திய தூதரத்துக்குள்ளோ துணைத் தூதரகத்துக்குள்ளோ காலடி எடுத்து வைக்கவில்லையா?அத்தரப்புடன் தமது உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் கூட தொடர்பு கிடையாது என பகிரங்கமாக கஜேந்திர குமாரால் கூற முடியுமா?அரசியல் லாபத்திற்காக பிடிக்காதவர்களை இவ்வாறு கொச்சைப்படுத்துவது இயலாமையின் வெளிப்பாடு.

பிரிவினைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தவர்கள் அங்கு இனப்படுகொலையாளிகளை “கௌரவ” என பெயருக்கு முன்னால் விழித்து உரையாற்றுபவர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை அரசின் உளவாளிகள் என குற்றஞ்சாட்டுவது கோமாளித்தனமானது. நான் அவமதிக்கப்பட்ட போது ஏற்பட்ட கோபத்தினாலும் என் மீது கொண்ட அன்பினாலும் ஜனநாயக போராளி கட்சியினர் சில கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமை துரதிஷ்டவசமானது.

மிகவும் அயோக்கியத்தனமான ஒரு விடயத்தை இறுதியாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது “எமது மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இம்மண்ணை ஆள அருகதை அற்றவர்கள்” இவ்வாறு குறிப்பிட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இக்கருத்துக்குரியவர் கஜேந்திரகுமார், கஜேந்திரன், சுகாஷ் என யாரோ ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

ஆனால் திலீபனைக் குறிப்பிட்டதன் மூலம் மக்களை திசை திருப்ப முனைகின்றனர். திலீபன் இயக்கத்தில் இணைந்த காலத்திலேயே அரசியல் பணிக்கு அனுப்பப்பட்டவன். அவன் அரசியல் பொறுப்பாளராகி நல்லூரில் மூச்சை விட்ட இக்கால இடைவெளியில் எந்தத் தேர்தலும் நடைபெறவில்லை. எண்பத்து மூன்றாம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளுராட்சி சபைக்கான (யாழ் மாநகர சபை, சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகரசபைகள்) தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது. ஸ்

ரீலங்கா அரசின் நிர்வாகத்துக்கான சகல தேர்தல்களையும் நாம் நிராகரிக்கிறோம் என்ற நிலைப்பாடு அப்போது எடுக்கப்பட்டது. தீர்மானம் குறித்த துண்டு பிரசுரத்துக்கான வசனங்களை தலைவரே தனது கையால் எழுதியிருந்தார்.எந்த ஒரு கூட்டத்திலோ பத்திரிகை அறிக்கையிலோ திலீபன் இவ்வாறு பேசியதாக செய்தி வெளிவரவில்லை. ஒளிநாடாவிலும் இதனை காணமுடியாது.

சில காலம் மட்டக்களப்பில் நான் இருந்தேன். ஆகவே எனக்கு இதுபற்றித் தெரியாது. எங்கேயாவது இப்படி திலீபன் சொன்னானா? என திலீபன் பிரதேச பொறுப்பாளராக இருந்த போதும், உண்ணாவிரதம் இருந்த அத்தனை நாட்களும் அருகில் இந்த ராஜனை கேட்டேன். ஒரு போதும் திலீபன் இப்படிச் சொல்லவில்லை என உறுதியாகச் சொன்னான். முன்னணியின் செயற்பாடுகள் பற்றிய தீர்ப்பு இனி மக்கள் கையில்தான்.

திலீபனின் ஒப்பற்ற தியாகத்தை மலிவு விலையில் விற்பதை அனுமதிக்கப் போகிறோமா? என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *