மானிப்பாயில் வீதியில் வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி ஆசிரியரின் நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி இரவு 7 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் வீடு திரும்பிய போதே இந்த வழிப்பறி கொள்ளை கத்திமுனையில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஊரெழு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23, 25 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய சந்தேக நபர்கள் மூவரும் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்களிடமிருந்து நான்கரை தங்கப்பவுண் சங்கிலி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
Be First to Comment