இரண்டு பிரிவாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட முல்லைதீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவினை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த குழுவின் பரிந்துரைக்கு அமைய எதிர்வரும் 12 ஆம் திகதி இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்புக் கடற்றொழிலாளர்களினதும் பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்ட நிலையில், போராட்டங்களை கைவிட்டு கலைந்து செல்வதற்கு இரண்டு தரப்பு பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்தனர்.
தொலைபேசி ஊடாக, நேற்று(05.10.2022) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், “அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாகவும் சுருக்கு வலைத் தொழிலை மேற்கொள்வது தொடர்பாகவும் இரண்டு தரப்பினாலும் எதிர் எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தங்களுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாவிடில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற கருத்து இரண்டு தரப்பினாலும் முன்வைக்கப்படுகின்றது.
அனைவருக்கும் பொதுவான அமைச்சர் என்ற அடிப்படையில் இரண்டு தரப்பினதும் நியாயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது.
எனவே, இந்த விடயத்தின் அவசரப்படாமல் நிதானமாகவே தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். இந்த யதார்த்தத்தினை புரிந்து கொண்டு அனைவரும் அமைதியாக ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
Be First to Comment