வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனைக்கு பல இளைஞர்கள் அடிமையாகிவரும் நிலையில் சமூகத்தை பாதுகாப்பதற்காகவும், இளைஞர்களை மீட்பதற்காகவும் அம்மான் படையணி தமது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.
மேற்கண்டவாறு விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையிலான ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியை சேர்ந்த ஜெயா சரணவா கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் தலைவராக தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் 17 வருடங்கள் தன்னை அர்ப்பணித்த விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மன் செயற்பட்டு வருகிறார்.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சி ஆதரவா அவர்களோடு சந்திப்பு ஒன்றை மேற்கொண்டபோது நமது இளைஞர்களின் எதிர்காலத் திட்டம் பற்றி விரிவாக ஆராய்ந்தோம்.
வடமாகாணத்தில் போதைப் பொருளுக்கு இளைஞர்களை அடிமையாகுவது தொடர்பில் ஆராய்ந்தபோது அது தொடர்பில் அம்மான் படையணி ஒன்றை உருவாக்கி இளைஞர்களுக்கான வேலை திட்டத்தை செய்யுமாறு கட்சியின் தலைவர் பணித்தார்.
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நாம் செயற்படப் போகிறோம் என்றவுடன் பலர் நினைப்பார்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட போகிறார்கள் என, அவ்வாறு சட்டத்தை கையில் எடுத்து செய்யும் நோக்கம் எமக்கு இல்லை.
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இளைஞர்களை உள்ளடக்கிய வேலை திட்டத்தினை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
Be First to Comment