Press "Enter" to skip to content

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு? தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டில் சோதனை!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நாம் தமிழர் கட்சி (என்டிகே) நிர்வாகியின் வளாகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை நடத்தியது.

சிவகங்கையில் உள்ள விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டிலேயே தேசிய புலனாய்வுக் குழுவினர் சோதனை நடத்தினர்.

மன்னார் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாலைக்கு அருகில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பணியாற்றி வரும் 27 அகவைக்கொண்ட விக்னேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய அமைப்புகள் தொடர்ந்தும் விழிப்பாக உள்ளன.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை ஒருங்கிணைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை செயலிழந்த விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் போராளியான சபேசன் என்ற சத்குணம், 2021 அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் நடிகரும் இயக்குனருமான சீமானால் நிறுவப்பட்ட என்டிகே வலுவான தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி செயற்பட்டு வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பதாகவும் சீமான் அறிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை சீமான் தயாரிக்கவுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *