லொத்தர் சீட்டுக்கான 17.5 சதவீத கொடுப்பனவை உடனடியாக 20 சதவீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தொகை அதிகரிக்கப்படவில்லையாயின், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கிருஷாந்த மரம்பகே தெரிவித்துள்ளார்.
விற்பனை பங்கு பணத்தை நூற்றுக்கு 20 சதவீதமாக அதிகரிக்குமாறு 10 வருடங்களாக கோரி வருகின்றோம். இதுவரை அந்த தொகை அதிகரிக்கப்படவில்லை.
திறைச்சேரியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த விற்பனை முகவர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமை வருத்தமளிக்கின்றது.
நாட்டில் தற்போது சுமார் 4,800 விற்பனை பிரதிநிதிகளும் 38,000 விற்பனை உதவியாளர்களும் லொத்தர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை நம்பி சுமார் இரண்டு இலட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 100 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், லொத்தர் விற்பனை முகவர்களும் விற்பனை உதவியாளர்களும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் லொத்தர் விற்பனையை மேற்கொண்டு லொத்தர் வியாபாரத்தை உயர்த்துவதற்கு செயற்பட்டு வருகின்றனர்.
எனினும் லொத்தர் விற்பனை முகவர்கள், விற்பனை உதவியாளர்கள் தொடர்பில் எவ்வித அக்கறையும் இன்றி தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் செயற்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழலில், விற்பனை பங்கு தொகை உயர்த்தப்படாததால் விற்பனை பிரதிநிதிகள், உதவியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே லொத்தர் சீட்டு விற்பனை பங்கு தொகையானது 20 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment