Press "Enter" to skip to content

முதலாவது பிணை முறி மோசடி வழக்கிலிருந்து அர்ஜுன் மகேந்திரன் விடுதலை

2015 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்கு பிணை முறி விநியோகம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளை மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

இதன்படி, 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி பிணை முறி விநியோகத்தில் மோசடியில் ஈடுபட்டதாக அர்ஜூன் அலோசியஸ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ஜெப்ரி அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உட்பட்டவர்களுக்கு  எதிரான பத்து குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, மொத்தமாக 14 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வழக்கில் 05 முதல் 14 வரையிலான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, பிணைமுறி வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், 01 முதல் 04 வரையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அடுத்த நீதிமன்ற அமர்வில், தமது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக மன்றில் அறிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு பிணை முறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பத்து பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என்ற அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு நீதிமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சமத் மொராயஸ், தமித் தோட்டாவத்த மற்றும் நாமல் பலல்ல ஆகியோர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட முடியாது எனக் குறிப்பிட்டு நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனையை தாக்கல் செய்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நபராக பெயரிடப்பட்டுள்ள பேப்பச்சுவல் ட்ரரிஸ் லிமிட்டெட் ஒரு நிறுவனம் எனவும் அவர் வாதிட்டார்.

இந்த ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே நீதிமன்றில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *