வல்லை பகுதியில் நேற்று இரவு மட்டும் வீதியால் பயணித்த 3 பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி10 பவுண் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி கொள்ளையர்கள், அந்தப் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர்கள் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி உட்பட சுமார் 8 பவுண் நகைகளை வழிப்பறி செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்று ஒரு சில மணிநேரத்தில், வல்லைவெளிப் பகுதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரை பின்னால் வந்து மோதி, அப்பெண்ணை விபத்துக்குள்ளாக்கிவிட்டு,
அந்த பெண் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலி மற்றும் பெறுமதியான கையடக்க தொலைப்பேசியை அக்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். யாழ்.வலிகாமம் பகுதியையும் வடமராட்சி பகுதியையும் இணைக்கும் பகுதியாக காணப்படும் வல்லைவெளிப் பகுதி நீரேந்து பகுதியாகவும்,
ஆள் நடமாட்டம் குறைந்த, குடியிருப்புக்களற்ற பகுதியாகவும் காணப்படுகிறது. இருள் சூழ்ந்த இரவு வேளைகளில் அப்பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், அப்பகுதி வழியே பயணிப்பது ஆபத்து நிறைந்ததாக உள்ளது.
எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் அப்பகுதியில் மின்விளக்குகளை பொருத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Be First to Comment