வெளிநாடுகளில் புகலிடக் கோரிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக தமது வீடுகள் மீது சட்டவிரோதக் கும்பல்களை வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்காக இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதாக கைதான சந்தேகநபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அச்சுறுத்தல் நாடகமாடி புகலிடம்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக மேற்கு நாடுகளுக்குச் செல்லும் பலர் அங்கு தமக்கான புகலிடக் கோரிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக, நாட்டில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காண்பிப்பதற்காக இவ்வாறான தாக்குதல்களை நடத்துகின்றதாக கூறப்படுகின்றது.
தமது வீடுகளுக்கும், தளபாடங்களுக்கு மாத்திரம் சேதங்களை விளைவித்து இந்த நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகின்றனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு 69 சம்பவங்கள் இவ்வாறு வீடுகள் மீது மாத்திரம் தாக்குதல் நடத்தப்பட்டதாக பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையில் அந்த எண்ணிக்கை 49 ஆகப் பதிவாகியுள்ளது.
வீடுகள் சொத்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்
“ஆள்கள் மீது எந்தவொரு காயமும் ஏற்படுத்தாது தனித்து வீடுகள் – சொத்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் புகலிடக் கோரிக்கைக்காக நடத்தப்பட்டது என்று கூறமுடியாது.
எமது ஆரம்பகட்ட விசாரணைகளில் அவற்றில் அதிகமானவை அந்த நோக்கத்துடன் நடத்தப்பட்டன என்று கண்டறிந்துள்ளோம்” என பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வாள்வெட்டு வன்முறையாளர்களுக்கு பணத்தைக் கொடுத்து இவ்வாறான சம்பவங்களைச் செய்விக்கின்றனர். “வெளிநாடுகளிலிருந்து தமது முகவர் இந்த வீடு மீது தாக்குதல் நடத்தவும் என்று பணிப்புரை வழங்குவாராம்.
தாக்குதல் நடத்தினால் அதற்குரிய பணம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் என்று வாக்குமூலங்களில் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
Be First to Comment