நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஷ்டித்ததாக கூறி கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் 10 ஆயிரம் ரூபா பிணையில் இன்று (13) விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆஜராகிய நிலையில் அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேசும் நீதிமன்றில் இன்று ஆஜரான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மகிழடித்தீவு நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவினை பெற்றிருந்தாகவும் அதனை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் மீறியுள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் அது தொடர்பில் பிடியாணையினையும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் நீதிமன்றம் ஊடாக பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் எதுவித தடையுத்தரவோ, நீதிமன்ற அழைப்பாணையோ தமக்கு இதுவரையில் வழங்கப்படாத நிலையில் பொலிஸார் தமக்கு எதிரான பிடியாணையிணையினை நீதிமன்றில் பெற்றிருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வினை தாங்கள் அனுஷ்டித்த போது எந்தவித தடையுத்தரவும் வழங்கப்படவில்லை எனவும் குறித்த நிகழ்வு குறித்து எந்தவித நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்களும் தமக்கு வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment