Press "Enter" to skip to content

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மைத்ரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் வகிக்கும் சகல பதவிகளில் இருந்தும் தன்னை நீக்கும் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த செப்டம்பரில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதால், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது.

இதன்படி, அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்புரிமையும் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *