வாள்களுடன் காரில் பயணித்த குழு ஒன்றை மடக்கிய பொலிஸார் காரில் பயணித்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
சந்தேகத்திற்கிடமான காரை துரத்திச் சென்ற பொலிஸார், தல்பிட்டிய பகுதியில் சந்தேக நபர்களை மடக்கியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால்,
எதிரணியினரைக் கொல்லும் நோக்கில் இந்தக் குழு பயணித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகேவிற்கு கிடைத்த தகவலின் பேரில் மொரட்டுவையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த காரை
பாணந்துறை நகரின் மத்தியில் வீதித்தடையை பயன்படுத்தி நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதும் பொலிஸ் உத்தரவை மீறி களுத்துறை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர்.
பாணந்துறை தெற்குப் பொலிஸாரின் விசேட பயிற்சி பெற்ற அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் காலி வீதி வழியாக 5 கிலோமீற்றர் தூரம் காரைத் துரத்திச் சென்றதாகவும்,
தல்பிட்டிய பாலத்திற்கு அருகில் கார் ஒரு பக்க வீதியில் சிக்கியதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்கு, காரில் இருந்த சந்தேகநபர்கள் மூவர் தப்பிச் சென்றதுடன், 06 கூரிய வாள்கள், 05 கறுப்பு முழு முகமூடிகள், 04 ஜாக்கெட்டுகள் மற்றும் 04 கையடக்கத் தொலைபேசிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை தெற்கு போம்புவல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பிரதேசத்தில் ஒரு கும்பலைக் கொல்லும் நோக்கில் பிரதான சந்தேக நபருடன் 04 பேர் காரில் பயணித்ததாகவும், மேலும் இருவரை காரில் ஏற்றிச் செல்ல தயாராக இருந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கார் பாணந்துறையில் இருந்து வாடகை அடிப்படையில் பெறப்பட்டமை தற்போதைய ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Be First to Comment