ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் இன்று அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.அப்பாவி இளைஞர்கள் மாத்திரம் தான் இன்றும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
போராட்டத்தில் எமக்கு பிரச்சினை இல்லை,ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தான் பிரச்சனை உள்ளது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேர்தலுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் எமக் கு இல்லை, தவறுகளை திருத்திக் கொண்டு சிறந்த முறையில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெறுவோம்.நாட்டு மக்கள் எமக்க நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்து எழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் நாவலபிடி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2019ஆம் ஆண்டு நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை.பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக திட்டமிட்ட வகையில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது.நாங்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.வாய் மூலமாக குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்காமல் முடிந்தால் சட்ட நடவடிக்கை எடுங்கள் என பகிரங்கமாக அறிவித்துள்ளோம்.
கடந்த மாதங்களில் ஜனநாயக போராட்டம் என குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் இன்று அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.அப்பாவி இளைஞர்கள் தான் ஏதும் அறியாமல் இன்றும் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.ஆகவே போராட்டம் தொடர்பில் எமக்கு பிரச்சனை இல்லை,ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தான் எமக்கு பிரச்சனை உள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு செல்ல அச்சமடைந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.தேர்தலுக்கு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது.எத்தேர்தல் இடம்பெற்றாலும் தவறுகளை திருத்திக் கொண்டு போட்டியிட்டு சிறந்த முறையில் வெற்றி பெறுவோம் என்றார்.
Be First to Comment