இலங்கைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டகாலக் கடனுதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார்.
இதன்போது, இலங்கைக்கு குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில் எரிபொருளைப் பெறுவதற்கு இவ்வாறான கடனுதவியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கடன் உதவியை பெறுவதற்கான செயல்முறை மற்றும் எரிபொருளைப் பெறும் முறை குறித்து ரஷ்யாவின் நிதி அமைச்சுடன் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் ரஷ்ய பிரதி நிதியமைச்சர் மக்சிமோவ் தைமூர், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகார்யன் மற்றும் நிதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment