பல கோடி ரூபாய் மோசடி செய்து சிறையில் இருக்கும் திலினி பிரியமாலி, நடிகைகள் மற்றும் மொடல்களை பயன்படுத்தி தனக்கு பணம் கொடுத்த தொழிலதிலபர்களை மிரட்டியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
திலினி பிரியமாலி என்ற பெண் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும், அந்த அதிகாரிகளை நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த சந்திப்புகளை அவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளதாகவும், சில உரையாடல்களை பதிவு செய்துள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் திலினியின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய கணனிச் சாதனங்களை ஆராயும் போது காணொளி காட்சிகள் மற்றும் ஒலிப்பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காட்சிகள் மற்றும் ஒலிநாடாக்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலும் ஆராயப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திலினி பிரியமாலி என்ற பெண் சில வர்த்தகர்களிடம் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை துண்டுகளை வழங்கி பண மோசடி செய்துள்ளதாகவும், அந்த பித்தளை துண்டுகளை கொண்டு செல்வதற்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் பாதுகாப்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவரது பாதுகாப்பு ஆலோசகராக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
திலினி பிரியமாலி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Be First to Comment