நாடளாவிய ரீதியில், இலஞ்ச ஊழல் மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தற்போது இலஞ்சம் பெறும் நடவடிக்கைகள் நூற்றுக்கு 20 அல்லது 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலஞ்சம் பெறுவது அதிகரித்து இருந்தாலும் அது தொடர்பிலான முறைப்பாடு ஆணைக்குழுவுக்கு கிடைப்பது குறைவாக உள்ளதாகவும் இதன் காரணமாக சில அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக உணவுவகைகளை இலஞ்சமாக பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலஞ்சம், ஊழல்மோசடி தொடர்பில் கடந்த வருடம் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் உட்பட 83 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான வழக்குகள் அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளாகும்.
55 வழக்குகள் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு மோசடிகள் மற்றும் திருட்டுகள், கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Be First to Comment