Press "Enter" to skip to content

குறையப்போகிறதா விலை – நளின் பெர்னாண்டோவின் புதிய முயற்சி

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகையை முன்னிட்டு அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், மற்றும் சிறப்பு அங்காடி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது இயன்றளவு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு முயற்சிப்பதாக அந்த தரப்பினர் பதிலளித்துள்ளதோடு, விலை அதிகரிப்பினை மேற்கொள்ளாது இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

உலர்ந்த மிளகாய் ஒரு கிலோகிராம் 300 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. ஒரு கிலோகிராம் பருப்பு 165 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. கோதுமை மா ஒரு கிலோகிராம் 150 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 100 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. வெள்ளைச் சீனி ஒரு கிலோகிராம் 90 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 40 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. சம்பா அரிசி மற்றும் நாடு அரிசி ஒரு கிலோகிராம் 20 ரூபாவினால் குறைடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

95 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் 85 வீதமாக குறைவடைந்தமை இதற்கு பிரதான காரணமாகும்.

அத்துடன் கோதுமை தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணம் உற்பத்தி நிறுவனங்கள் கோதுமையின் விலையை  அதிகரித்தமையாகும்.

இதேவேளை முட்டைக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலையில் முட்டையை விற்பனை செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கோழி வளர்ப்பிற்கான மூலப்பொருள் சந்தையில் குறைந்த விலையில் விநியோகிக்கப்படுகின்ற நிலையில், முட்டையினை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *