Press "Enter" to skip to content

இலங்கை பெண் கைதி ஜப்பானில் மரணம்: சட்டத்தரணிகள் எடுத்த தீர்மானம் நியாயமற்றது!

2021ஆம் ஆண்டு இலங்கையின் பெண் கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக ஜப்பானின் – நாகோயாவில் உள்ள குடிவரவு திணைக்களத்தின் அதிகாரிகளை குற்றஞ்சாட்டுவதில்லை என சட்டத்தரணிகள் எடுத்த தீர்மானம் நியாயமற்றது என்று அந்த நாட்டின் சுயாதீன நீதித்துறை குழு ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கை பெண் கைதி மரணம் குறித்த வழக்கை மறுவிசாரணை செய்வதற்கான வழியை இந்த தீர்மானம் வகுத்துள்ளதாகவும் அந்த குழு அறிவித்துள்ளது.

தொழில்முறை அலட்சியத்தால், இலங்கை யுவதியான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமா என்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பிராந்திய குடிவரவு சேவைகள் அதிகாரிகளிடம், குறித்த சுயாதீன நீதித்துறை குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விசாக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்ட விஷ்மா, வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து வழக்கை விசாரித்த நகோயா மாவட்ட அரச சட்டத்தரணிகள் அலுவலகம், குடிவரவு திணைக்கள நிர்வாகி உட்பட 13 அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டாம் என ஜூன் மாதமளவில் தீர்மானித்திருந்தது.

இந்தப் பெண்ணின் இறப்புக்கான காரணம் குறித்த இறுதி முடிவுக்கோ, அல்லது அவரது செயற்பாடுகளுக்கும் மரணத்திற்கும் இடையே உள்ள காரணத்தையோ கண்டறிய முடியவில்லை என்பதே நகோயா மாவட்ட அரச சட்டத்தரணிகள் அலுவலகத்தின் தீர்மானத்துக்கு காரணமாக அமைந்தது.

இதற்கிடையில், விஷ்மாவின் சகோதரிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த முடிவை மறுஆய்வு செய்யுமாறு நீதித்துறை குழுவிடம் முறைப்பாட்டை அளித்தனர்.

இறந்த யுவதியின் சகோதரிகளான வயோமி மற்றும் பூர்ணிமா ஆகியோர், நகோயா குடியேற்ற தடுப்பில் உள்ள அதிகாரிகள், தகுந்த பாதுகாப்பு அளித்திருந்தால் விஷ்மா வாழ்ந்திருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையிலேயே, தற்போது இந்த சுயாதீனக் குழுவின் தீர்மானம் வெளியாகியுள்ளது.

விஷ்மா ஒரு மாணவியாக 2017இல் ஜப்பானுக்கு சென்றார்.

அங்கு அவர் ஏதிலி அந்தஸ்துக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அவருடைய விசாக் காலம் நிறைவடைந்து தொடர்ந்தும் ஜப்பானில் இருந்ததற்காக 2020 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *