Press "Enter" to skip to content

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்போம்

ஒரு நாடு என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் அதே வேளை, ஒரு கொள்கைக் கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரச, அரை அரச மற்றும் தனியார் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், ஒரு நாடு என்ற வகையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்திருப்பதன் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை மேலும் வெற்றியடையச் செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டு இந்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாயின், அரச துறை மாத்திரமன்றி தனியார் துறையும் வலுப்பெற வேண்டுமென ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

இன்று மக்கள் படும் இன்னல்களை தாம் மறந்து விடவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், எவ்வாறேனும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சமுர்த்திக் கொடுப்பனவு கிடைக்காத சுமார் 20 இலட்சம் குடும்பங்களுக்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாட்டில் நாம் இருக்கிறோம். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இன்று நாட்டு மக்கள் படும் இன்னல்களை நான் நன்கு அறிவேன். தொழில் வாய்ப்புகள் குறைவடைந்து செல்வதை நாம் பார்க்கிறோம். பணவீக்கம் காரணமாக குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. அன்று இருந்த வசதிகள் தற்போது இல்லை. இதனால் கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவையனைத்தும் இந்தப் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட நிலைமைகளாகும். இது எப்படி நடந்தது என்று இப்போது பேசிப் பயனில்லை.இப்போது அது முடிந்துவிட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதே இப்போது எமக்கு இருக்கும் ஒரே வழி. இல்லையெனில், நாம் மீள முடியாது. அந்தப் பாதையில் செல்லப் போகிறோமா அல்லது வீழ்வதா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த வீழ்ச்சியடைந்த நாட்டை விரைவில் மீட்கவே முயற்சி எடுக்கின்றேன்.

நாங்கள் தற்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் கடன் பெற்ற ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய மூன்று முக்கிய நாடுகளில் ஜப்பானுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. சீனாவின் EXIM வங்கியுடன் இந்த வாரம் கலந்துரையாடினோம். இப்போது அது பற்றிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். அவர்களுடன் கடன் மறுசீரமைப்பு செயல்முறை பற்றி கலந்துரையாடுவோம். இந்த நடவடிக்கைகளை நாங்கள் படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.7 பில்லியன் டொலர்கள் மூன்று அல்லது நான்கு தவணைகளில் கிடைக்கும். மேலும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்தும் சுமார் ஐந்து பில்லியன்களைப் பெறக்கூடியதாக இருக்கும். அது மட்டுமன்றி, இந்த ஆண்டின் இறுதியில் ஜப்பானுடன் பல்வேறு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும். அந்த செயற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

அத்தோடு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. உலகளவில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி தற்போது குறைந்து வருகிறது. அந்த நிலையில் அடுத்த ஆண்டு நமது ஏற்றுமதிச் சந்தை வருமானம் குறைவடையலாம்.

நாம் நமது சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்த வேண்டும். இந்த வருட இறுதிக்குள் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க எம்மால் முடியும். அப்போது மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். அதற்கு முன் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும். அதற்கு அரச துறை மட்டுமின்றி தனியார் துறையும் வலுப்பெற வேண்டும். இல்லையெனில் இடைவெளி ஏற்படும்.

முதலில் மக்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்க முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும். இந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சமுர்த்திக் கொடுப்பனவு பெறாத சுமார் 20 இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டின் பின்னர் நாட்டில் நல்ல நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம்

2024 ஆம் ஆண்டுக்குள், நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியை எட்ட முடியும். அதுவரை இந்த சிரமங்களுக்கு அனைவரும் முகங்கொடுக்க வேண்டும்.

இன்று இங்குள்ள மக்களில் உழைக்கும் மக்களும் சிறுதொழில் செய்பவர்களுமே மிகவும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும், அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் சிக்கல்கள் எழுந்துள்ளன. வங்கிக் கட்டமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும். வங்கிகளைப் பாதுகாக்கப்படும் போது, அவற்றில் கடன் பெறும் சிறு தொழில்கள் வீழ்ச்சியடையலாம். அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? 2024 முதல் பொருளாதாரத்தை எவ்வாறு கையாள வேண்டும், வர்த்தகங்களின் போட்டித்தன்மையை பாதுகாத்து ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். அதேபோல் உழைக்கும் மக்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

அரச துறையில் மட்டுமின்றி, தனியார் வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக சபைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயகள் என அனைத்து மக்களுடனும் விரிவாக கலந்துரையாடி, குறைந்தபட்சம் இந்தப் பொருளாதாரத் திட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து ஒரு சமூக உடன்படிக்கைக்கு வரவேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்”. என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *