Press "Enter" to skip to content

யாழில் விவாகரத்துப் பெற்று 11 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைந்த ஆசிரிய தம்பதியர்!!

யாழில் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்த ஆசிரியத் தம்பதிகள் மீண்டும் இணைந்துள்ளார்கள். யாழ் வலிகாமம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியர் யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கற்கும் போதே காதலித்தது பின் பட்டதாரியாகி 2010ம் ஆண்டு திருமணம் முடித்துள்ளார்கள். திருமணமாகி சில மாதங்களில் கணவன் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தவுடன் அங்கு சென்றுள்ளார். இதன் பின்னர் மனைவியிடம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். கணவர் பணியாற்றிய தனியார் நிறுவனம் யாழ்ப்பாணத்திலும் கிளை ஒன்றைத் தொடங்க ஆயத்தப்படுத்தியுள்ளது. இதற்குப் பொறுப்பாக கணவரை நியமிக்க குறித்த நிர்வாகத்தினர் விரும்பியுள்ளனர். அதனால் அடிக்கடி லீவு எடுக்காது யாழ்ப்பாணத்திற்கு கிளை வந்தவுடன் யாழ் வருவதாக கணவர் மனைவிக்கு கூறியும், இது தொடர்பாக மனைவிக்கு சந்தேகம் வந்து கணவருடன் முரண்படத் தொடங்கியதாகத் தெரியவருகின்றது. வெளிநாட்டில் வசிக்கும் மனைவியின் சகோதரர்கள், கொழும்பில் பணியாற்றிய கணவன் தொடர்பாக அறிவதற்கு, கொழும்பில் உள்ள தமது நண்பர்களை நாடியுள்ளனர். அவர்கள் தங்கையின் கணவர் கொழும்பில் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடாத்தி வருவதாக தவறான தகவலை கூறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்து கணவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அத்துடன் கணவரின் பெற்றோர் மற்றும் சகோதர்கள், உறவினர்கள் வீட்டுக்குச் சென்றும் கணவர் தொடர்பாகக் கூறி முறையிட்டு அவர்களுடன் முரண்பட்டதாகத் தெரியவருகின்றது. தான் அடிக்கடி யாழ்ப்பாணம் வராது விட்டதற்கான காரணத்தைத் கூறியும் மனைவி அதை நம்பவில்லை என அறிந்த கணவர் கொழும்பிலிருந்து வந்து மனைவியையும் கொழும்பு கொண்டு செல்ல முற்பட்ட போது, மனைவி சம்மதிக்காது, குறித்த வேலையை விட்டுவிட்டு தன்னுடன் வீட்டில் இருக்குமாறு கூறி அவருடன் முரண்பட்டுள்ளார். இதன் காரணமாக மனைவியை கணவன் தாக்கியுள்ளார். கடும் சந்தேகத்தில் இருந்த காதல் மனைவியும் கணவன் தாக்கியதால் கடும் கோபமுற்று பொலிசில் முறையிட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு அடுத்தநாள் நீதிமன்றில் கணவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன் காரணமாக கடுப்பான கணவனும் விவாகரத்துக்கு உடன்பட்டதாகத் தெரியவருகின்றது. இவர்கள் 2012ம் ஆண்டு விவாகரத்துப் பெறும் போது அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஒரு வயதாகும்.

இதன் பின்னர் இருவரும் பட்டதாரி நியமனம் கிடைத்து ஆசிரியர் வேலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். கொழும்பில் வேலை செய்து வந்த கணவனுக்கு வன்னிப் பகுதியில் ஆசிரியர் நியமனமும் மனைவிக்கு யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியையாக நியமனமும் கிடைத்துள்ளது. விவாகரத்து கிடைத்து ஓரிரு வருடங்களுக்குள்ளேயே கணவர் கொழும்பில் எந்தவொரு திருமணமும் முடிக்கவில்லை என்பதுடன் வன்னியிலும் அவர் ஒழுக்கமான முறையிலேயே வாழ்கின்றார் என்பதையும் மனைவியின் சகோரர்கள் மற்றும் பெற்றோர் உறவுகள் அறிந்து கவலைப்பட்டுள்ளார்கள். பின்னர் கணவனையும் மனைவியையும் சேர்ந்து வாழ வைக்க பலர் முயன்றும் கணவன் விடாப்பிடியாக மறுத்தாகத் தெரியவருகின்றது.

கணவன் விவாகரத்துப் பெற்ற பின் தனது மகளைப் பார்க்க பல தடவைகள் முயன்றும் ஒவ்வொரு காரணம் கூறி மனைவி மகளை காட்டவில்லை என்றும் தெரியவருகின்றது. அதன் பின்னர் மகளைப் பார்க்க கணவன் வரவில்லை. 2016ம் ஆண்டளவில் தம்பதிகளின் மகளையும் வன்னிக்கு கொண்டு சென்று அவள் மூலமாக தாயுடன் சேர்த்து வைக்க மனைவியின் உறவுகள் முயன்றும் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இந் நிலையில் கடந்த வருட இறுதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் படிக்கும் தம்பதிகளின் மகள் பூப்படைந்துள்ளார். இதனையடுத்து மகளே நேரில் போய் தந்தையிடம் தனது வீட்டுக்கு வரும்படி கூறியதுடன் தந்தையுடனேயே சில நாட்கள் தங்கியிருந்ததுடன் ஓரிரு நாட்களில் தனது தாயாரையும் தந்தையின் இருப்பிடத்துக்கு வரவழைத்துள்ளார்.

தனது மனைவி தான் இருக்கும் இடத்திற்கு வந்ததை அறிந்த கணவர் வன்னியின் தான் தங்கியிருந்த வீட்டுக்கு வராது பக்கத்து வீட்டில் தங்க முற்பட்ட போது மகள் எவ்வளவு சமாதானம் கூறியும் கணவரான தந்தை அசைந்து கொடுக்கவில்லை. அடுத்தநாளே தாய் அங்கிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டுவிட்டார். இதன் பின்னர் தனது மகளுக்கு எந்த முக்கிய நிகழ்வு நடந்தாலும் தான் முன்னின்று செய்வேன் என்ற உறுதிப்பாட்டுடன் மகளை யாழ்ப்பாணம் அனுப்பியுள்ளார் தந்தை.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு தந்தையின் நிலையில் பூப்புனித நீராட்டு விழா நடந்த மண்டபத்துக்கு வந்த கணவர் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவை முன்னின்று நடாத்தி முடித்த பின் வெளியேற ஆயத்தமானர். அப்போதே கணவனின் பெற்றோர் மற்றும் உறவுகளும் மனைவி மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த மனைவியின் சகோதரர்களும் கணவரை தடுத்து நிறுத்தி மகள் வந்த காருக்குள் குண்டுக்காட்டாக துாக்கி ஏற்றி தங்களது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள். (இவ்வாறு துாக்கி கொண்டு செல்லப்பட்ட வீடியோ அவர்களின் சம்மதத்துடன் ஓரிரு நாட்களில் வெளியிடுவோம்.) மனைவியின் வீட்டில் வைத்து கணவருக்கு கடும் உபதேசத்தை கணவனின் உறவினர்களும் அயலவர்களும் கொடுத்துள்ளார்கள். அத்துடன் மகளின் பாசப் பிணைப்பு கணவரை தடுமாற வைத்துள்ளது. தந்தையாக தனது வீட்டில் தங்காது விட்டால் தான் கல்வி நடவடிக்கை எல்லாவற்றையும் விட்டுவிடுவதாக மகளும் எச்சரித்துள்ளார். இதன் பின்னர் வேண்டா வெறுப்பாக கணவர் தங்கியிருந்துள்ளார். ” பள்ளிக்கூட லீவில் இங்கு தங்கிவிட்டு லீவு முடிஞ்சவுடன் வன்னிக்கு ஓடி விட்டு பிறகு வராமல் நின்றுவிடுவார் உன்ர அப்பா” என தாயார் மகளை உசுப்பேற்றியுள்ளார்.

இதன் பின்னர் இது தொடர்பாக மகள் தந்தையிடம் உத்தரவாதம் பெற்ற பின்னரே வன்னிக்கு அனுப்பியுள்ளார். கடந்த வாரம் மீண்டும் தந்தை மகளிடம் சென்றுள்ளார். அதே நேரம் வெளிநாட்டு சகோதரர்களால் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு பரிசளிக்கப்பட்ட கார் ஒன்றையும் தந்தையிடம் மகள் கையளித்துள்ளார். தற்போது தாயும் தந்தையும் ஒற்றுமையாகியுள்ளார்கள். இது தொடர்பாக அறிந்த அவர்களது பல்கலைக்கழக நண்பர்களாக இருந்து தற்போது குடும்பஸ்தர்களாக இருப்பவர்கள் அவர்களை சந்தித்து வருகின்றார்கள். குறித்த தம்பதிகளின் செயற்பாடு தொடர்பாகவும் அவர்களது பேட்டிகளையும் வீடியோவாகத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார் அவர்களது பல்கலைக்கழக நண்பர் ஒருவர். விரைவில் அது யூரியுப் சனல் ஒன்றில் வெளியாகும். இருந்தாலும் ஆசிரியையான மனைவி குறித்த சம்பவத்தை காட்சியாக்கி வீடியோவாக வெளியிட அனுமதிகவில்லை என தெரியவருகின்றது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் அதனை நாம் இங்கு வெளியிடுவோம். காத்திருங்கள்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *