Press "Enter" to skip to content

ஓகஸ்ட் மாதம் முதல் மீற்றர் பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபடமுடியாது!யாழ்அரச அதிபர்,

யாழ்  மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவ பாலசுந்தரன் தெரிவித்தார்,

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ் மாவட்டத்தில்  வாடகைக்கு செலுத்தும்  முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன

இதன் காரணமாகவும் முச்சக்கரவாடகை வண்டி செலுத்துவோர் தொடர்பில்கிடைத்த பல்வேறு  முறைப்பாடுகள் தொடர்பிலும்  தீர்மானம் எடுப்பதற்காக நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட முச்சக்கர வாடகை வண்டி சங்கத்தினர் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தக சங்க பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிநிதி ,மற்றும் அதனுடன் இணைந்ததாக வட மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற முக்கியமானதுறை சார்ந்த உத்தியோகத்தர்களை அழைத்து யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது

குறித்த கலந்துரையாடலில் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள்சம்பந்தமான பலவிடயங்கள்ஆராயப்பட்டது அதிலே பொருத்தமற்ற அளவுக்கதிகமான ஒலிகளை எழுப்பி செல்லுவது  அநாவசியமான கண்ணாடிகள் பொருத்தி இருப்பது மற்றும் தேசிய கொடியினை அவமதிக்கும் வகையிலே கிழிந்த மாசு படிந்த வாகனங்களுக்கு பொருத்தமற்ற அளவிலான தேசியக்கொடிகளை பொருத்துதல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டது

குறிப்பாக பயணிகள் அச்சப்படும் அளவிற்கு பயணிகள் மட்டுமல்லாது வீதிகளில் பயணிப்போர் அச்சப்படும் அளவிற்கு  உயர்ந்த ஒலிகளை எழுப்புகின்ற கருவிகளை முச்சக்கர வண்டிகளிலே பொருத்துவது தடுக்கப்பட வேண்டும்

அதுபோல வாடகை முச்சக்கர வண்டியினை செலுத்துபவர்கள் மரியாதைக்குரிய ஆடைகளை அணிந்து நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது

அத்தோடு  பதிவு செய்யப்படாத வாடகை முச்சக்கர வண்டிகளும் யாழ்ப்பாணநகர பகுதிகளில் பல தொல்லையாக இருப்பதாக மாநகர சபையினால்  குறிப்பிடப்பட்டுள்ளது எனவே பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரப்பட்டது

அதேபோல மிக முக்கியமாக 2017 ம் ஆண்டு முதலாம் இலக்க மோட்டார் வாகன சட்டத்தினுடைய ஒழுங்கு விதி அதாவது வர்த்தமானியிலே பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிக்கு அமைய நாடு முழுவதிலும் கட்டணம் வசூலிப்பது அந்தந்த முச்சக்கர வண்டிகளுக்கு உரிய கட்டண மீற்றர்  பொருத்தப்பட வேண்டும்

அதாவது கட்டணமானி பொருத்தப்பட வேண்டும் என ஒழுங்கு விதியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அது நடைமுறையில் இல்லை

இதனால் பல மடங்கு கட்டணங்களை பொதுமக்கள் செலுத்த வேண்டி இருப்பதாக பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது

ஆனபடியினால் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானிகளை பொருத்தும் நிறுவனத்தினரையும் அழைத்து நேற்று எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அவர்களுடைய தகுதிக்கேற்ப ஒரு நாளைக்கு  குறைந்தது 40 வரையிலான மானிகளை தான் முச்சக்கர வண்டியில் பொருத்த முடியும் என குறிப்பிட்டு இருந்தார்கள்

போக்குவரத்து அதிகார சபையின் கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் உள்ளதாகவும் அதே போல யாழ்ப்பாண நகரை பகுதியில் 2025 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது

எனவே ஜூலை மாதம் 30 ம் திகதிக்கு முன்னதாக வாடகைக்கு அமர்த்தப்படுகின்ற சகல முச்சக்கர வண்டிகளும் கட்டண மானிபொருத்தப்பட வேண்டும்

பொருத்தப்பட்டால் மாத்திரமே சேவையில் ஈடுபட அனுமதிக்க முடியும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை வாடகை வண்டியாக பாவிப்பதற்கு அனுமதிப்பதில் தரித்து நிற்பதற்கான பதிவுகளை ரத்து செய்து  பதிவுகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி மாநகர சபையும் அதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

இந்த விடயங்களுக்கு சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி சங்கத்தினர்  ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்கள்

எனவே ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீற்றர் மானி பொருத்தாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *