ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் பாதுகாப்பற்ற முறையில் நீராடுவதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
அத்துடன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட வக் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு பெண்கள் நேற்று (6) நீரில் மூழ்கினர்.
அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் 42 வயதுடைய உடஹவத்தையைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய பெண் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹங்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பெலிஹூல் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நேற்று காணாமல் போயிருந்தனர்.
அவர்களில் 13 வயது சிறுமி உயிரிழந்ததுடன் அவரை மீட்பதற்கு முயற்சித்த 12 வயது சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் 13 வயதான சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேநேரம் காணாமல் போயுள்ள 12 வயது சிறுவனை தேடும் பணிகள் தொடர்கின்றன.
Be First to Comment