மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளதாக களுத்துறை தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு ஹிக்கடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு நேற்று சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
அவரை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக, மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும், யுவதி ஒருவரும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பாடசாலை மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் கடந்த 6 ஆம் திகதி மாலை 6.30 அளவில் அப்பகுதியில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர், அந்த விடுதியில் இரண்டு அறைகளை பதிவு செய்தனர். இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும் நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்துவதை விடுதி ஊழியர் ஒருவர் பார்த்துள்ளதாக சாட்சியமளித்துள்ளார்.
பின்னர், ஒரு யுவதியும் ஒரு இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறினர்.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றை இளைஞனும் பீதியுடன் விடுதியை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது விடுதிக்கு உணவு எடுக்க வந்த ஒருவர், விடுதியை ஒட்டியுள்ள தொடருந்து மார்க்கத்தில் சிறுமி ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளரென தெரியவந்தது.
குறித்த சிறுமி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக இருந்ததால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
திடீரென விடுதியை அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞர், அவசர அவசரம் எனக் கூறி முன்னதாக விடுதியிலிருந்து வெளியேறிய இளைஞனையும் யுவதியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த பின்னர் பிரதான சந்தேகநபர் மகிழுந்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், தண்டவாளத்தில் கிடந்த யுவதியை சடலத்தை மற்றைய இளைஞனும், யுவதியும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு இரவு 9.30 அளவில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்
இதேவேளை, சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற மகிழுந்தின் சாரதியும் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர், ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Be First to Comment