தமிழகம் – மதுரையில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பில் 600க்கு 591 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
எனினும் ஏதிலி என்ற குறிச்சொல்லால் அவரால் மருத்துவத்துறையில் கல்வி கற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆணையூர் ஏதிலிகள் முகாமைச் சேர்ந்த மாணவி யு.திரிதுஷா என்ற மாணவியே 6 பாடங்களிலும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் தனது மதிப்பெண்கள் குறித்து மகிழ்ச்சியாக இருந்தாலும், தனது ‘ஏதிலி அந்தஸ்து’ காரணமாக தனது கனவை அடைய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆணையூர் ஏதிலிகள் முகாமில் பிறந்த மாணவி யு.திரிதுஷா தமிழில்- 97, ஆங்கிலத்தில் – 96, பொருளாதாரத்தில் – 99, வணிகவியலில் – 99, கணக்கியலில் – 100, கணினி பயன்பாடு பாடத்தில் – 100 என 6 பாடங்களிலும் 95க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
10-ம் வகுப்பு முடித்தவுடன் அறிவியலைத் தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தாம் ஆசைப்பட்டதாக குறிப்பிட்ட திரிதுஷா, தற்போது அந்த முடிவை மாற்றி வணிகவியலில் கல்வி கற்று கணக்காய்வாளராக வரவேண்டும் என்று ஆசைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விதிமுறைகளின் படி, இலங்கைத் தமிழ் ஏதிலிகள் மருத்துவப் படிப்புகளைத் தொடர அரசாங்க ஒதுக்கீட்டின் கீழ் தகுதியற்றவர்கள், இருப்பினும், ஏனையத்துறைகளில் கல்வி கற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையூர் இலங்கை ஏதிலிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் குறைந்த பட்சம் 50 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
Be First to Comment